-->

History of Son of Cricket Virat Kholi, in Tamil part 1 - கிரிக்கெட்டின் பிதாமகன் விராட் கோலியின் வரலாறு தமிழில் பாகம் 1

4 minute read

ஒப்பிடுவதற்கு தகுதியே இல்லாத இரண்டு வீரர்களை ஒப்பிடுவது மிகவும் தவறு. "யாரைப் பார்த்து நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேனோ அவரோடு என்னை ஒப்பிடுகிறீர்கள். " சச்சினுடனான ஒப்பீடு குறித்து விராட் கோலி உதிர்த்த வார்த்தைகள் இவை. சச்சினின் சாதனை மகுடத்தில் ஒரு வைரம் பொறிக்கப்படும் போது எல்லாம், அச்சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்றே கருதினர் அவரது ரசிகர்கள். ஆனால் சச்சினின் ரசிகர் ஒருவரே அவரது சாதனைகளை முறியடித்துக்கொண்டுள்ளார் என்பதே நிகழ்கால உண்மை. 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்தியா முழுவதுமே கிரிக்கெட் காய்ச்சல் தொற்றிக்கொண்டது. அந்தத் தாக்கத்தை சுமார் 20 ஆண்டுகள் தன் தோளில் சுமந்தவர் தான் சச்சின் டெண்டுல்கர். அவரது ஓய்வின் போது கிரிக்கெட்டின் கடவுள் ஓய்வு பெற்று விட்டதாக எழுதித் தீர்த்தனர் பத்திரிக்கைகள். சச்சினின் சாதனைகளை யாராலும் தகர்க்க முடியாது என்றே நம்பினர் கிரிக்கெட் இரசிகர்கள், ஆனால் நவீன கிரிக்கெட்டின் பிதாமகனாக உருவெடுத்து நிற்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி. 


Click to get glorify


History of "Son of Cricket" Virat Kholi, in Tamil


கிரிக்கெட்டில் ஆரம்பம்:

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறுகிறது. சச்சின், சேவாக், யுவராஜ், தோனி என நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோற்றதால், தொடரை விட்டு வெளியேறியது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் சர்வதேச அளவிலான உலகக்கோப்பை போட்டிகள் மட்டுமே தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அதிலும் 2008 ஆம் 19 வயது உட்பட்டோருக்கான உலககோப்பையை ஒளிபரப்பு செய்தபோது உலகமே அத்தொடரை உற்றுநோக்கியது. இந்தியாவின் இளம் வீரர்கள்  அந்த தொடரில் கிரிக்கெட் இரசிகர்களை கலங்கடித்து வந்தனர். 18 வயது வீரர் ஒருவரின் பேட்டிங்கை குறித்து உலகமே விவாதித்து கொண்டிருந்தது. களத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை இரசிகர்களை கவரத்தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு 19 வயது உட்பட்டோருக்கான உலககோப்பையை வென்று திரும்பியது இந்தியாவின் இளம்படை. இந்தியக் கிரிக்கெட்டை ஒரு ரசிகர் கொண்டாட நினைத்தால் நிச்சயமாக அவர் கோலியை கொண்டாடித் தான் ஆக வேண்டும். சாதனைகள் முறியடிக்கபட வேண்டியவைதான், ஆனால் கோலி ஒவ்வொரு சதமடிக்கும் போதும், பல சாதனைகளை தகர்த்து கொண்டே வருகிறார் என்பதுதான் உண்மை.  

விராட் கோலி தனது 9 வயதில் மட்டையை சுழற்ற ஆரம்பித்தார். பள்ளிப்பருவம் தொடங்கி கிரிக்கெட்டில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டவர். விராட் கோலியின் கிரிக்கெட் குறித்த அவரது கனவுகளுக்கு உறவாக இருந்தவர் அவரது தந்தை . 2006 ஆம் ஆண்டு இரஞ்சிக் கோப்பை தொடருக்கான டெல்லி அணியில் இடம் பெற்றிருந்தார் விராட் கோலி. கர்நாடகா அணிக்கு எதிராக களமிறங்கிய கோலி அன்றைய தினத்தில் 40 ரன்கள் அடித்திருந்தார். விடியற்காலை 3 அரை மணி வரை  நண்பர்களுடன் தனது நேரத்தை செலவிட்டு வீடு திரும்பிய கோலிக்கு மீள முடியாத துயரம் ஏற்பட்டது. அவரது தந்தை நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்தார், விடியற்காலை என்பதால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை, அம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்துவிட்டு , தன் தந்தையை காப்பாற்றி விடலாம் என நினைத்த கோலிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது, அவரது தந்தை தன் மகன் முன்னிலையிலேயே இந்த உலகத்தை விட்டு பிரிந்தார் விராட்டின் தந்தை. "ஆம்புலன்ஸ் வருவதற்குள் தன் தந்தையின் உயிர் தன் கையிலேயே பிரிந்தது. அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது, நான் கண்ணீர் விட்டு கதறிய நேரம் அது " என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியபோது கோலியின் கண்கள் கலங்கின. தன் தந்தை இறந்ததால் இரஞ்சிக் கோப்பை போட்டியில் ஆடமாட்டார் என்றே சகவீரர்கள் கருதினர், ஆனால் தன் தந்தையின் சடலத்தை வீட்டில் கொண்டு தன் அணிக்காக அன்றைய நாளில் விளையாடினார், விராட் கோலின் இந்த அர்பணிப்பு தான் , இன்று விராட் கோலி என்று இந்த உலகம் போற்றும் ஒரு வீரரை இந்தியாவிற்கு தந்தது. தந்தையின் மரணம் விராட் கோலிக்கு புதிய வேகத்தை கொடுத்தது, இனி தன் பாதையில் கைக் கொடுக்க யாரும் இல்லை என்பதை உணர்ந்த கோலி, இன்னும் கடுமையாக உழைத்தார். 2008 19 வயது உட்பட்டோருக்கான உலககோப்பையை அடுத்து, இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டார் கோலி, சச்சின் டெண்டுல்கர், சேவாக், காம்பீர், டோனி என பல சிறந்த வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியை ஆக்கிரமித்திருந்த காலம் அது, ஆனால் இந்திய அணியின் தேர்வுக்குழு அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்பளித்து வந்தது. 

இந்திய அணிக்  கனவு:

19 வயது உட்பட்டோருக்கான உலககோப்பையை வென்ற 4 மாதங்களிலே இந்திய அணியில் இடம்பெற்றார் கோலி, அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கிற்கு ஓய்வளிக்கப்பட்டது. முதல் போட்டியே அயர்லாந்து மண்ணில், சேவாக்கிற்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கோலி 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே அரை சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார் அணிக்கு. இதனையடுத்து அடுத்தடுத்த தொடரில் இடம் கிடைக்கும் என நம்பியிருந்த கோலிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. ஓராண்டு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார் கோலி. ஓராண்டு கடுமையான உழைப்புக்கு பின் இந்திய அணியில் இடம்பெற்றார் கோலி. 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை தொடரில், இந்திய அணிக்கு தனது பங்களிப்பு முக்கியம் என்பதை உணர்த்த ஆரம்பித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ,இந்திய அணி வீரர்கள் விரைவாக தங்களது விக்கெட்டுகளை இழந்து விட, தனி ஆளாக நின்று வெற்றியை இந்திய அணியின் பக்கம் திருப்பினார் கோலி. இந்தப் போட்டியில் 79 ரன்கள் அடித்த கோலி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதற்கடுத்து தொடர்ந்து வாய்ப்புகளையும் பெற்றார் கோலி. அவரது பேட்டிங் ஸ்டைல் களத்தில் தன் அணிக்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் காரணமாக அவருக்கு ரசிகர்கள் உருவாகத் தொடங்கினார்கள். இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் முதல் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும், சேசிங் என வரும்போது தடுமாறி வந்தனர், ஆனால் கோலியின் வருகைக்கு பின்னர், அவர் எந்த அளவுக்கு பெரிய ஸ்கோராக இருந்தாலும், அதற்கேற்ப தனது பேட்டிங்கை மாற்றும் திறமையுடையவராக இருந்தார் கோலி. 

சாதனைகள்:

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக மாறியிருந்தார் கோலி. அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெற வேண்டிய தருணம், சச்சின் தூக்கி சுமந்த கிரிக்கெட்டை யார் சுமக்க போகிறார் என ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்க , நான் இருக்கிறேன் என்பது போல் ஆட்டத்திறனை மேம்படுத்தி வந்துக்கொண்டிருந்தார் கோலி. இந்திய அணியின் எதிர்காலம் மிளிரத்தொடங்கியது, கோலியின் ஆட்டத்திறனைக் கண்டு உலகம் வியக்க தொடங்கியது, கிரிக்கெட்டின் வல்லரசு என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா தொடங்கி சிறிய அணிகள் வரை , அத்துனை அணிகளுக்கு எதிராகவும் அதிரடி காட்டத் தொடங்கினார். பெரும்பாலான இந்திய வீரர்கள், வெளிநாட்டு தொடர்களில் பெரிதளவில் சோபிக்கமாட்டார்கள், ஆனால் கோலிக்கு வெளிநாடும், உள்நாடும் ஒன்றாகவே இருந்தது. அவர் அடித்துள்ளார் சதங்களில் 60% சதங்கள் வெளிநாட்டு மண்ணில் அடித்தவை என்பதே அவரது திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்திய அணி திணறும் ஆட்டங்களில் எல்லாம் தனி நபராக நின்று இந்திய அணியை கரைசேர்த்த விராட் கோலி,  இந்திய அணியின் பிதாமகனாகவே மாறினார். கோலி இருந்தால் போதும் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்பதே இரசிகர்களின் எண்ணமாக மாறும் அளவிற்கு தன்னை மேம்படுத்திக்கொண்டார் . டெண்டுல்கரோடு ஒப்பிட்டு கோலியை கொண்டாடத் தொடங்கியது கிரிக்கெட் உலகம். ஆனால் டெண்டுல்கருக்கு முற்றிலும் மாறுபட்டவர் தான் கோலி. ஆட்டத்தில் சச்சினின் அணுகுமுறையை காட்டிலும் 100 சதவீதம் ஆக்ரோஷமானது கோலியின் அணுகுமுறை. தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சாதித்தவர் டெண்டுல்கர் என்றால், சந்தர்ப்பங்களை உருவாக்கி சாதித்தவர் கோலி என்பது கிரிக்கெட் உலகின் குரல். ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி, இருபது ஓவர் கிரிக்கெட்டிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி, 100 % அர்ப்பணிப்போடு தன் அணிக்க தேவையானவற்றை செய்வார் கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து யார்? என்ற கேள்வி எப்படி எழுந்ததோ, அதேப் போல் தோனிக்கு பின்னர் யார்? என்ற கேள்வியும் வந்தது. இதற்காக விடையும் விராட் கோலிதான்.