Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of GOD OF CRICKET Sachin Tendulkar In Tamil.கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் வரலாறு தமிழில்!
கிரிக்கெட் இந்தியர்களைப் பொறுத்தவரையில் உயிர் முழுவதும் பரவியுள்ள ஒரு உணர்வு. அனைத்து இன மக்களையும் இணைக்கின்ற ஒரு ஒற்றை மதம். அந்த மதத்தின் ஒரு கடவுள் தான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள். 30 வருடங்களாக இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட சக்கரவர்த்தி. 1989 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கராச்சியில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் 409 என்ற இமாலய இலக்கைக் குவித்தது பாகிஸ்தான். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விட களத்திற்குல் இறங்குகிறார் 16 வயது இளைஞர் ஒருவர், அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருக்கப் போகிறார் என்பதை அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. தொடக்கத்தில் கிடைத்த தோல்விகளையும், ஏமாற்றங்களையும் தனதாக்கிக் கொண்டு 24 ஆண்டுகள் இந்தியக் கிரிக்கெட்டை தனது தோள்களில் சுமந்தார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் என்ற உலகில் கோலோச்சிய சச்சின் எனும் நாயகனை நினைவுப்படுத்தும் சிறு முயற்சி தான் இந்த தொகுப்பு.
சச்சினின் ஆரம்பம்:
1987 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட பணி , எல்லைக்கோட்டைத் தாண்டும் பந்துகளை சேகரிக்கும் பால்பாய் பணி. உலகைக் கலக்கிய பேட்ஸ்மேன் சச்சின் என்று தான் நம்மில் பலருக்கு தெரியும், ஆனால் அவர் விரும்பியது வேகப்பந்து வீச்சாளர் ஆக வேண்டும் என்பதே . MRF வேகப்பந்து அகாடமிக்கு சென்ற டெண்டுல்கர் தான் வேகப்பந்து வீச்சாளர் ஆகவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவிக்க , அவரது உயரத்தைக் காரணம் காட்டி நிராகரித்தார் டென்னிஸ் லில்லி. காரணம் டெண்டுல்கர் ஒரு சிறந்த மட்டையாளர் என நம்பினார் டெண்ணிஸ் லில்லி. கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் சிறுவயதில் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். 1988 ஆம் ஆண்டு வினோத் காம்ப்ளியோடு இணைந்து பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் ஆடிய ஆட்டமே , அவருக்கு இந்திய அணியில் இடத்தை உறுதி செய்தது எனலாம். இவர் தனது நண்பர் காம்ப்ளியோடு சேர்ந்து எதிர் அணியின் பந்துகளை சிதறடித்தார். அந்த ஆட்டத்தில் டெண்டுல்கர் குவித்த ரன்கள் 326. அதற்கு அடுத்த ஆண்டே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றார் சச்சின் டெண்டுல்கர்.
அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். 1989 ஆம் ஆண்டு முதல் போட்டியில் களமிறங்கிய போது கவாஸ்கர் கொடுத்த பேடுகளை கட்டிக்கொண்டு களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர். இந்த தொடரில் நான்காம் டெஸ்ட் போட்டியின் போது நடந்த சம்பவம் சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கரின் மன உறுதியை உலகிற்கு அறிய செய்த நிகழ்வு. இத்தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளும் டிரா, நான்காம் போட்டியை பாகிஸ்தான் வென்றால் அந்த தொடரை வென்று விடும். இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்ததுக் கொண்டிருந்த நிலையில், சச்சின் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார், வக்கர் யூனிஸ் வீசிய ஒரு பந்து சச்சினின் மூக்கைப் பதம் பார்த்தது. இரத்தம் சொட்ட நின்றுகொண்டிருந்த சச்சினைப் பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாவித் மியான்தத் இதற்கு மேல் ஆட முடியாது, மருத்துவமனைக்கு செல் எனவும், குழந்தைகள் பால் மட்டும் குடித்தால் போதுமானது என போஸ்டர்களைக் காட்டி உசுப்பேற்றினார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாத டெண்டுல்கர் மைதானத்திற்கு வந்த மருத்துவரிடம் முதலுதவி செய்துக் கொண்டு, காயத்துடன் விளையாடத் தொடங்கினார். இந்தப் போட்டியில் சச்சின் குவித்த ரன்கள் 57 . 16 வயதில் களம் கண்ட சச்சின் டெண்டுல்கர் 20 வயதிற்கு முன்பே ஐந்து டெஸ்ட சதங்கள் பெருமைப் பெற்றார் . சிறுவயதிலேயே டெண்டுல்கரின் விளையாட்டு திறன் , உலக அளவில் கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருந்தவர்களின் புருவத்தை உயர்த்தியது.
சரித்திர நாயகன்:
இந்தப் பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்களைக் குவிப்பார் . 1991 -1992 ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலியா அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை. சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 18 வயதில் 148 ரன்கள் அடித்து கலக்கினார் சச்சின் டெண்டுல்கர். சிட்னியில் சதமடிப்பதே சாதனை, அதை 18 வயது சிறுவன் அடிக்கையில் ஏதோ அதிசயம் நடப்பதாக உணர்ந்தேன் என்றார் ஆலன் பார்டர். வளர்ந்து வந்த இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் ஊடக வசதிகள் பெருகி வந்த காலகட்டம் அது. 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. அந்த தாக்கத்தை இளைஞர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்தார் சச்சின் டெண்டுல்கர். மேலை நாட்டினர் போல குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்தியக் காலகட்டத்தில் , சச்சினின் முகம் திருஓவியமாகவும், அழியாத முகமாக இளைஞர்கள், குழந்தைகள் மனதில் பதிந்துப்போனது. இரண்டு தலைமுறையினரை கவர்ந்தவர் ஆனார் சச்சின். இன்றைய குழந்தைகள் முதல், பதின் பருவத்தினர் வரை சச்சின் போல வரவேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சச்சின். தனி ஒரு ஆளாக ஆட்டத்தை துக்கி நிறுத்திய ஆட்டங்கள் ஏராளம்.
டெண்டுல்கர் கிரிக்கெட்டில் களம் கண்ட காலத்தில் , உலகளவில் வேகப்பந்து வீச்சில் கோலோச்சிய வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஆறு அடிக்கு மேல் உயரமானவர்கள்.மிகக் கடுமையாக பவுன்ஸ் செய்யும் திறமையுடையவர்கள். கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வதற்கு உயரமானவர்களாளே முடியும் என்ற எண்ணம் கோலோச்சி இருந்து காலக் கட்டத்தில் குள்ளமான உருவம், எந்த சலனமும் இல்லாத பார்வை என கிரிக்கெட் உலகில் கால் வைத்தார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் குறித்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அடித்து நொறுக்கி ரசிகர்களின் நம்பிக்கையை வென்றெடுத்தார் சச்சின் டெண்டுல்கர்.ஜெண்டில்மேன் கேம் எனப் பெயர்க் கொண்ட கிரிக்கெட்டின் இன்றைய நிலை அனைவரும் அறிந்ததே.சூதாட்டம் பால் டேம்பரிங் என வெற்றிக்காக வீரர்கள் எதையும் செய்ய துணிந்து விட்டனர் ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் கண்ணியத்துடன் நடந்துக் கொண்டவர் சச்சின். எதிரணி வீரருடன் எந்த ஒரு உரசலிலும் ஈடுபடாதவர். தவறாக அவுட் கொடுக்கப்பட்ட போதும் அம்பயர்களை ஏறெடுத்துக் கூட பார்க்காதவர். அதே வேளையில் தனக்கு அவுட் என தெரிந்து விட்டால் நடுவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்காமல் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டும் அற்புதமான மனிதர் சச்சின் டெண்டுல்கர்.
" மகனே வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் அதில் பல பாகங்களும், பாடங்களும் இருக்கின்றன. நீ கிரிக்கெட் வீரனாக இருக்கப் போகிற காலத்தை விட சாதாரண மனிதனாக இருக்கும் காலமே அதிகம் ஆகவே ஒரு தந்தையாக ,சச்சின் ஒரு நல்ல மனிதர் என்று பிறர் சொல்வதையே சச்சின் ஒரு மகத்தான வீரர் என்பதை விட நான் விரும்புவேன்" என்ற அவரது தந்தையின் வரிகள் தன்னை மனிதானக்கியது என்று மெய்சிலிர்க்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
மட்டையால் பதிலளித்தவர்:
எதிரணிகள் சீண்டினாலும் மௌனத்தை மட்டுமே பரிசாக அளித்தவர் அதே வேளையில் தன்னுடைய திறமையால் அவர்களுக்கு பதிலளித்தார். டெண்டுல்கரை நினைவிருப்பவர்களுக்கு ஜிம்பாப்வேவின் ஹென்றி ஓலங்காவை கண்டிப்பாக நினைவிருக்கும். அடுத்தடுத்து மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து ஓலங்காவின் பந்துகளுக்கு ஆட்டமிழந்த சச்சின், நான்காம் ஆட்டத்தில் அவரது ஒரே ஓவரில் மூன்று சிக்சர்களை விளாசி நான் கிரிக்கெட்டின் பிதாமகன் என்பது போல பதில் அளித்தார். ஆஸ்திரேலியா தொடர் ஒன்றின் போது பிராட் ஹாக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் சச்சின். ஆட்டம் முடிந்ததும் பிராட் ஹாக் அந்த பந்தை எடுத்து சென்று சச்சினிடம் ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார், பந்தை வாங்கிய சச்சின் இனிமேல் இது நடக்காது என எழுதி கையெழுத்திட்டு அளித்திருக்கிறார். இதற்கு பிறகு சுமார் பத்து ஆட்டங்களுக்கு மேல் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தும் சச்சினின் விக்கெட்டை பிராட் ஹாக்கால் எடுக்க முடியவில்லை. மெக்ரத், வார்னே, முரளிதரன், பிரட் லீ, வாக்கார் யூனிஸ், யாரும் டெண்டுல்கரின் அதிரடிக்கு தப்பியவர்களில்லை. 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரில் வார்னே அவர்களின் பந்தவீச்சை சச்சின் துவம்சம் செய்து தன்னுடைய திறனைக் காட்டினார். இந்த அதிரடியால் தான் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு முதலிடம் கிடைத்தது.
சாதனைகளின் பாட்ஷா:
ஒரு நாள் போட்டியில் சச்சின் கால் வைத்தப் போது , ஒரு அணி 200 ரன்கள் குவிப்பது என்பதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் ஒரு தனி நபர் மட்டும் 200 ரன்கள் அடிப்பார் என சச்சின் காலத்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தற்போதைய காலகட்டத்தில் தனி ஒருவர் 200 அடிப்பது அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும் அதற்கான விதையை விதைத்தவர் டெண்டுல்கர் தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் 200 அடித்துவிட்டு பேட்டை தூக்கியப் போது , டெண்டுல்கரை இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்துப் பார்த்தது. கிரிக்கெட்டின் கடவுள் என சச்சினை வர்ணித்தது கிரிக்கெட் ரசிகர்களின் உலகம். "நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் 4 ஆம் நிலையில் ஆடுகிறார்" என்ற ஆஸ்திரேலியா வீர்ர மேத்யூ ஹைடணின் வார்த்தைகளில் நிறைந்துள்ள அர்த்தங்கள் தான் டெண்டுல்கர் எனும் சாதனை மனிதனுக்கு எதிரணி வீரர்கள் அளித்த மகுடம் எனக் கூறலாம். இந்தப் புகழாரத்தின் உச்சம் தான் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் வார்த்தைகள். பிராட்மேன் அழைப்பின் பேரில் அவரை சந்தித்த சச்சினிடம் " தற்போதைய ஃபீல்டிங் சூழலில் என்னால் 70 வரை சராசரி வைத்துக் கொள்ள முடியும் எனக் கூறினார். சச்சினின் ஆட்டம் தன்னைப் போலவே இருப்பதாக தெரிவித்த டான் பிராட்மேன் . அவரை தன் மகன் எனக் கூறி பெருமிதம் அடைந்தார். சதத்தில் சதம் கண்ட போதும் கூட ஆர்பாட்டம் இன்றி ஒரு கிரிக்கெட் வீரரால் இருக்கமுடியும் என்றால் அது சச்சினால் மட்டுமே முடியும். 100 சதங்கள், ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், என அவரது சாதனை மைல்கள் அதிகரித்துக்கொண்டே சென்றதற்கான காரணம் அவர் கிரிக்கெட் மீது கொண்ட காதலன்றி வேறொன்றுமில்லை.
" முதலில் சச்சின் மும்பைக்கு சொந்தம், இரண்டாவது நாட்டுக்குச் சொந்தம், மூன்றாவதாக தான் எனக்கு சொந்தம் இது திருமணத்திற்கு முன்பே எனக்கு தெரியும் . சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியும், ஆனால் கிரிக்கெட் இல்லாத சச்சினை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது "என சச்சினின் மனைவி அஞ்சலியின் பேச்சுக்கள் அவர் எவ்வளவு கிரிக்கெட்டை நேசித்தார் என்பதற்கான உதாரணம்.
விடைப்பெற்ற சகாப்தம்:
கிரிக்கெட்டை தாண்டி மனிதத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் சச்சின் .தன்னால் முடிந்த வரை அதை வாழ்விலும் கடைப்பிடித்தார் சச்சின். தனிமனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார் சச்சின். மதுபான விளம்பரங்களில் நடிக்க மறுத்து நாட்டின் இளைஞர்கள் மீதான அக்கறையை அழுத்தமாக சொன்னவர். தன்னை சட்டையில்லாமல் படமெடுப்பதைக் கூட அனுமதிக்காதவர்.சச்சினின் சுயசரிதையான "playing in My Way"யில் தன்னுடைய காதலையும், இல்லறத்தையும் அவ்வளவு அழகாக எடுத்துரைத்திருந்தார்.2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சச்சின் அறிவித்த போது அவரது ரசிகர்கள் கலங்கித்தான் போனார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழந்த போது ஒரு நிமிடம் உலகமே நின்றது போன்ற உணர்வு சச்சின் ரசிகர்களுக்கு . அவரது கேட்சைப் பிடித்த எதிரணி வீரர் கண்கலங்கி நிற்கிறார், ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் பெவிலியன் நோக்கி நடந்தார் சச்சின். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறோம் என்ற ஒட்டுமொத்த கவலையையும் தன் இறுதியுரையில் கொட்டி தீர்த்தார் சச்சின். 22 யார்டு மற்றும் 24 ஆண்டுகளுக்கு இடையிலான என் கிரிக்கெட் வாழ்க்கை இன்று முடிந்த விட்டது என கூறிவிட்டு அவர் கண்கலங்கிய போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது. சச்சின் ஓய்வு பெற்று விட்டார் . ஆனால் களத்தில் அவர் செய்த சாதனைகளும், போராட்டங்களும் இன்றளவும் கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. வேண்டுமானால் அவரது சாதனைகள் முறியடிக்கப்படலாம், ஆனால் அவர் கிரிக்கெட்டின் சகாப்தம் என்பதை மறந்துவிட முடியாது.
Post a Comment