-->

History of Yercaud in tamil- ஏலைகளின் ஊட்டி ஏற்காட்டின் வரலாறு தமிழில்

4 minute read

தமிழ்நாட்டின் உள்ள மாநகராட்சிகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் தான் "ஏழைகளின் ஊட்டி" என்றழைக்கப்படும் ஏற்காடு. இது ஒரு கோடை வாழிட நகரம் ஆகும். இது தொடர்ச்சியற்று காணப்படும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரசன் சேர்வராயன்மலை என்றும் அழைக்கப்படும் ஏற்காட்டில்  எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த மலைகள்,  கண்களை கவரும் காப்பித் தோட்டம், மனதை மயக்கும் சில்லென்று குளிர்ந்த காற்று என தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. 


History of yercaud in tamil

ஏற்காட்டின் வரலாறு:

கி.பி 1819 ஆம் ஆண்டு சேலம் பகுதியில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் சேர்வராயன் மலைகளை கண்டறிந்தார்கள். கி.பி 1820 முதல் கி.பி 1829 வரை பண்டைய சேலத்தின் ஆட்சியராக இருந்த ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த சர்.டேவிட் காக்பர்ன் என்பவரை இந்த சேர்வராயன் மலைகள் தன் அழகால் ஈர்க்கின்றன. அதனால் இந்த மலைத்தொடரில் முதல் நபராக சர். டேவிட் காக்பர்ன் அவர்கள் குடியேறுகிறார். இதன் காரணமாக இன்றளவும் இவர் "ஏற்காட்டின் தந்தை" என அழைக்கப்படுகிறார். 

கி.பி 1823ல் சேலத்தில் சிவில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து மருத்துவர் ஒருவரை இந்த சேர்வராயன் மலைகளின் அழகு,அடர்த்தி நிறைந்த வனப்பு மிகு விரைவாக கவர்கிறது. இதன் விளைவாக அந்த நிபுணர் அன்றைய காலகட்டத்தில் மாநில ஆளுநராக இருந்த சர்.தாமஸ்மன்ரோ அவர்களுக்கு, இந்த மலைத்தொடரில் ஒரு நகரம் அமையப்பெற்றால் அது இப்பகுதி மக்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா இடமாக இருக்கும் என பரிந்துரைக்கிறார். இவரின் பரிந்துரையை ஏற்ற சர்.தாமஸ் மன்ரோ அவர்கள் இத்திட்டத்திற்காக ஒரு அதிகாரியை நியமிக்கிறார். இத்திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே சேர்வராயன் மலையின் தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய்க்கு சேலம் மாவட்ட தலைமை மருத்துவர் ஒருவர் இறக்கிறார். இதன் காரணமாக இத்திட்டம்  கைவிடப்படுகிறது. 

கி.பி 1824 ல் இந்திய இராணுவத் தளபதியாக இருந்த கர்னல் வெல்ஷ் சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சேர்வராயன் மலைகளை பார்வையிடும் போது மரியாதை நிமித்தமாக "ஏற்காட்டின் தந்தை" என அழைக்கப்படும் சர். டேவிட் காக்பர்ன் அவர்களை கர்னல் வெல்ஷ் சந்திக்கிறார். இச்சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. 

 இந்நிகழ்வைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருந்த அதிகாரி,முயற்சி செய்து சேர்வராயன் மலைப்பகுதியில் காஃபி பயிரிடும் தொழிலை சூடுப்பிடிக்கவைக்கிறார். அதிக வருவாயை விரும்பிய சில மக்கள் சேர்வராயன் மலைகளின் தாழ்வான பகுதிகளில் காஃபி பயிரிடும் தோட்டத்தில் வேலை செய்யவும் ஆரம்பிக்கிறார்கள். 
கி.பி 1836 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த பிட்ச்சர் என்பவர் சேலம் ஜமீன்தாரிடமிருந்து சேர்வராயன் மலைப்பகுதியில் 1,25000 ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கி பண்ணைகளை அமைக்க ஆரம்பிக்கிறார்.இந்நேரத்தில் காஃபி தோட்டங்களும் பழத்தோட்டங்கள் அதிக வருவாயை ஈட்டத் தொடங்கியிருந்தன. 

இதனைத் தொடர்ந்து பெரிய பண்ணையாளர்களும்,புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களும், செல்வந்தர்களும், கிறிஸ்தவர்களும் அதிக அளவில் சேர்வராயன் மலைப்பகுதியில் நிலப்பகுதியை வாங்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக கி.பி 1841 ஆம் ஆண்டு கிறித்தவ பாதரியர் ஆன ஜே.ஏம் லீஷர் அவர்கள் சேலம் துணை ஆட்சியர் அறிவுரைப்படி ஒரு பிரம்மாண்டமான அழகிய வீட்டை சேர்வராயன் மலைப்பகுதியில் கட்டுகிறார். இந்த வீடு முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது. இது இன்றளவும் இந்ந ஏற்காட்டின் பழைமையை பறைசாற்றுகிறது. 

இறுதியாக கி.பி 1842ல் மதராஸ் மாகாணத்தின் ஆளுநர் தாமஸ் மன்ரோ அவர்கள் இந்ந ஏற்காட்டை கோடை வாழிட நகரமாக பிரகடனம் செய்கிறார். அன்றிலிருந்து தான் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டின் வளர்ச்சி ஆரம்பமானது. 

ஏற்காட்டின் வளர்ச்சி:

கி.பி 1857ல் இந்தியாவில் முதல் உரிமைப்போர் எனக் கருதப்படும் "சிப்பாய் கழகம்"ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய கிளர்ச்சியை உருவாக்கியது. இக்கிளர்ச்சியால் கேரளாவில் கலோனலின் எனும் ஒரு ஆங்கில அதிகாரி கொலை செய்யப்படுகிறார். இக்காலகட்டத்தில் தான் மதராஸ் மகாணத்தை சேர்ந்த பல ஆங்கிலேய அதிகாரிகள் பாதுகாப்பு கருதி ஏற்காட்டிற்கு வருகைப்புரிந்தார்கள். முக்கியமாக இந்த காலக்கட்டம் தான் ஏற்காட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது. இங்கு வந்த அதிகாரிகள் இம்மலைகளின் அழகு மற்றும் தட்பவெப்பநிலையால் கவரப்பட்டு இங்கேயே குடிப்பெயர்ந்தார்கள். இதன் காரணமாகவே ஏற்காடு நகர அமைப்பைப் பெற்றது. 

ஏற்காட்டின் அமைப்பு:

வரலாற்று அடிப்படையில் ஏற்காடு சிறப்பு பெயர் பெற்றது போல கண்களைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை அழகிலும் இந்த ஏற்காடு சில அரிய வகை சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஏற்காடு கண்டறியப்படுவதற்கு முன் மிகவும் இருள் அடைந்த காடாக தான் இருந்துள்ளது. "ஏரிக்காடு" என்பதே பெயர்மாற்றம் பெற்று ஏற்காடு என ஆயிற்று. 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 5326 அடி அதாவது 1623 மீட்டர் உயரத்தில் இந்த ஏற்காடு அமைந்துள்ளது. அதிக அளவில் மலைக்கிராமங்களையும், பழங்குடி இனங்களையும் கொண்டுள்ளது. சேலத்திலிருந்து 36 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோடை வாழிடம் 57 கிராமங்களையும், 26 குக்கிராமங்களையும் உள்ளடக்கியது. இம்மலை வாழிடத்தின் மொத்த மக்கள்தொகை 60000 ஆகும். இதில் 45000 பழங்குடியினரும் அடங்குவர்.

 உலகத் தரமிக்க, புகழ் பெற்ற மான்ஃபோர்ட் பள்ளியும்,sacred Heart Anglo Indian பள்ளியும் இங்கு தான் அமைந்துள்ளது.பட்டு உற்பத்தி ஏற்காட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்று. நாட்டின் பழைமை மிக்க பட்டுப்புழுக்களின் பண்ணை இங்கு உள்ளது. சுமார் 383 ச.கி.மீ பரப்பளவு கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமையும். வஷுஸ்ட நதி மற்றும்  திருமணிமுத்தாறு ஏற்காட்டில் ஊற்றெடுக்கும் ஆறுகளாகும்.

 

ஏற்காட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்:

ஏற்காட்டில் புகழ்மிக்க தேசிய தாவரவியல் பூங்கா 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 18.4 ஹெக்டேர் அளவாகும். இதில் 3000 திற்கு மேற்பட்ட மரங்களும், 1800 வகையான அரிய செடிகளும் குறிப்பாக பிச்சர் எனும் பூச்சி உண்ணும் தாவரமும் வளர்க்கப்படுகின்றன.மே மாதத்தில் நடைபெறும் கோடைவிழா இங்கு மிகவும் புகழ்பெற்றது . இக்காலத்தில் மலர் கண்காட்சி , நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி, படகு போட்டிகள் , கலை நிகழ்ச்சிகள் என ஏற்காடே கலைகட்டும். 

"மரகத ஏரி" என அழைக்கப்படும் ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளுள் ஒன்று. ஏரியின் நடுவில் ஒரு சிறிய நீரூற்றும் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகாமையில் காணப்படும் அண்ணா பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலை முறையைப் பயன்படுத்தி சில மலர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு ஏரியிலிருந்து 2 கி.மீ தொலைவில் ladies seat, gents seat , children's seat, Rose garden போன்ற சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளது. Ladies seat ல் இருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு இரசிக்க முடியும். 

ஏற்காடு ஏரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிளியூர் நீர்வீழ்ச்சி மழைக்காலங்களில் பார்க்க வேண்டிய ஒரு இடம். ஏற்காடு ஏரி நிரம்பி விட்டால் கிளியூர் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிவிடும். ஏற்காட்டில் பார்க்க வேண்டிய மற்றுமொரு இடம் தான் பகோடா பாயிண்ட் இவ்விடத்திலிருந்து சேலம் மாநகரின் மற்றுமொரு பக்கத்தை காண இயலும். ஏற்காடிற்கு வரும் சுற்றுலா பயணிகளால் பயணிகளால் தவிர்க்க முடியாத ஒரு இடம் சேர்வராயன் மலை உச்சி ஆகும்.சேர்வராயன் மலைகளிலேயே உயரமான பகுதி இவ்விடம் தான். புகழ் பெற்ற சேர்வராயன் குகைக் கோவில்களில் இருந்து கர்நாடகவிலுள்ள தலைக்காவிரி வரைக்கும் திப்பு சுல்தான் காலத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 

ஏற்காட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான ஒரு இடம் கரடியூர் காட்சிமுனை, ஏற்காட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடம் புகழ்மிக்க நாட்டன் பங்களாவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு இடம். போரின் போது திப்பு சுல்தானிற்கு மறைவிடமாக இவ்விடம் இருந்துள்ளது. அடுத்ததாக நல்லூர் அருவி ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். மழைக்காலங்களில் பார்க்க வேண்டிய ஒரு இடம் தான் இந்த அருவி.