-->

History of Lionel Messi in tamil part 2 - கால்பந்தின் கடவுள் மெஸ்ஸியின் வரலாறு தமிழில் பாகம் 2

3 minute read
முந்தைய இரு உலகக்கோப்பை தொடர்களில் நாக் அவுட் சுற்றில் வீழ்ந்த அர்ஜெண்டினா அணி, இந்த தொடரில் வீறுநடைப் போட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2014 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி சர்வதேச கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி . பெரும்பான்மையான ரசிகர்கள் மெஸ்ஸி எனும் தனிமனிதற்காக அர்ஜெண்டினா அணி கோப்பையை வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எதிர் பக்கத்தில் ஜெர்மனி எனும் பலம் வாய்ந்த அணி. ஆட்டத்திற்கான 90 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடிக்க ஜெர்மனி கோப்பையை வென்றது. இதனால் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் மெஸ்ஸி. இதோடு பராக் ஒபாமாவே மெஸ்ஸிக்கு ஆறுதல் கூறியது, அவரது இரசிகர்களை மேலும் சோகமடையச் செய்தது. 

History of messi in tamil

சர்ச்சைகளும், சாதனைகளும்:

தற்போது மெஸ்ஸி எந்த அளவுக்கு புகழின் உச்சியில் கொடிக்கட்டி பறக்கிறாரோ அதே அளவுக்கு போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அசாத்திய வீரராக திகழ்கிறார். உலகம் முழுவதும் இருவருக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். கால்பந்தில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் அடிக்கடி ஒரு சில விஷயங்களில் ஒப்பிட்டு பேசப்பட்டனர். ரசிகர்களின் இந்த ஆரவாரமும் அவர்கள் சர்வதேச அளவில் ஜொலிக்க பயன்பட்டது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற "ஃபிபா" விழாவில் ஆறாவது முறையாக மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதைப் பெற்றார். இரசிகர்கள் மெஸ்ஸியைக் கொண்டாடினாலும் சில கால்பந்து ஆர்வலர்கள் "ஃபிபா" விழாக்குழுவினரை சாடினர் . காரணம், அந்த ஆண்டில் மெஸ்ஸியை விட விர்ஜில் வான் டிஜிக் தான் சிறப்பாக விளையாடியதாக தெளிவுப்படுத்தினர். மேலும் இந்த விருது பட்டியலில் இடம் பெற்ற ரொனால்டோ இந்த விழாவை புறக்கணித்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. மெஸ்ஸி தலைமையிலான அணி உலகக்கோப்பை போன்ற தொடர்களில் சொதப்பினாலும், "லா லீகா" போன்ற தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. மெஸ்ஸி, நெய்மார் இருந்த போது பார்சிலோனா அணி சவால் மிக்க அணியாக இருந்ததோடு எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து பார்சிலோனா அணி 4 முறை "சாம்பியன்ஸ் லீக்"தொடர்களையும், 10 முறை "லா லீகா" தொடர்களையும் வென்றுள்ளது. இதில் பெரும்பாலான நேரங்களில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது மெஸ்ஸி தான். குறிப்பாக மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக மட்டும் 600 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அந்த அணியின் சாணக்கியனாக திகழ்கிறார். முதல் முதலில் மெஸ்ஸியை எந்த நம்பிக்கையில் பார்சிலோனா அணி தேர்ந்தெடுத்ததோ அந்த நம்பிக்கையை இந்த உலகிற்கே நிருபித்து காட்டிவிட்டார் மெஸ்ஸி. 

ஜெர்சி எண் 10:

மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டாக கருதப்படுவது 2012 ஆம் ஆண்டு தான். காரணம் அந்த ஒரு ஆண்டில் மட்டும் 91 கோல்களை அடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். ஒரு வருடத்தில் 91 கோல்கள் அடிப்பது என்பது அசாத்தியமான செயல் என்றாலும், மெஸ்ஸி தனது சிறப்பான ஆட்டத்திறன் மூலம் அதை நிகழ்த்தி காட்டினார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைப்பெற்ற ஒலிம்பிக் தொடரில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மெஸ்ஸிக்கும் அவரது ஜெர்சியில் உள்ள 10 ஆம் நம்பருக்கும் சில ருசிகர பந்தம் உள்ளது. 10 ஆம் எண் பார்சிலோனா அணியில் மிகவும் திறமையான வீரருக்கு வழங்கப்பட்டு வந்தது. மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக களமிறங்கிய போது 19 ஆம் எண் ஜெர்சியை அணிந்திருந்தார். அப்போது 10 ஆம் எண் ஜெர்சியை ரொனால்டினோ அணிந்திருந்தார். அவர் விடைபெறும் வரை மெஸ்ஸிக்கு 10 ஆம் எண் ஜெர்சி கிடைக்கவில்லை. 2008 ஆம் ஆண்டு ரொனால்டினோ பார்சிலோனா அணியை விட்டு விலகிய போது மெஸ்ஸிக்கு 10 ஆம் எண் ஜெர்சி வழங்கப்பட்டது. இரசிகர்களால் மெஸ்ஸியின் ஆட்டம் எந்த அளவுக்கு புகழ்ந்து பேசப்படுகிறதோ, அதே அளவுக்கு அவரது ரசிகர்கள் பெரும்பாலும் விரும்பும் எண்ணாக 10 ஆம் எண் மாறியுள்ளது. 

சிக்கல்களால் சிகரம் தொட்டவர்:

வாழ்க்கையில் பல வெற்றிகள்,  தோல்விகளை சந்தித்த மெஸ்ஸி 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான ஆண்டணெல்லா ரொக்குசாவை மணமுடித்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் மெஸ்ஸியின் மூத்த மகனான தியாகோ மெஸ்ஸி சிறுவயதில் இருந்த போதே, மெஸ்ஸியின் முதல் கிளப் அணியான Newell's old boys ஒப்பந்தம் செய்தது. இதற்கு காரணம் மெஸ்ஸி மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும்,அவருக்கு செய்யும் மரியாதை என தெரிவிக்கப்பட்டது. பல வெற்றிகளைக் கண்டுள்ள மெஸ்ஸி 2015 , 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற "கோபா அமெரிக்கா" தொடர் அவரது வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத தொடர்களாக அமைந்தது. காரணம் இரண்டு ஆண்டும் இறுதிப்போட்டியில் சென்று போட்டியை இழந்தது தான் காரணம். இதனால் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மெஸ்ஸி ராசியில்லாத கேப்டன் என ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். இதனால் ஓய்வு முடிவை அறிவித்த மெஸ்ஸி சில நாட்களில் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 

இளம் வயதிலேயே மெஸ்ஸி சமூக செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் மெஸ்ஸி பவுண்டேசன் மூலமாக ஏழை மக்களின் கல்வியையும், சுகாதாரத்தில் தன்னால் முடிந்த பங்களிப்பையும் அளித்து வந்தார். கிரிக்கெட்டில் எப்படி சச்சின் டெண்டுல்கரை கடவுள் போன்று கொண்டாடுகிறார்களோ அது போன்று கால்பந்தின் கடவுள் மெஸ்ஸி தான். அவரது சாதனை இன்னும் தொடரும். மரடோனா, பீலே, ரொனால்டோ , ரொனால்டினோ என பல ஜாம்பவான்கள் கால்பந்தில் சாதித்தாலும், மெஸ்ஸி எனும் மாயக்காரணின் சாதனை மற்ற ஜாம்பவான்களைக் காட்டிலும் தனித்தே நிற்கும். கால்பந்து போட்டி எப்படி அழியாதோ, அதே போன்று மெஸ்ஸியின் புகழும் காலம் கடந்து நிற்கும் என்று உறுதியாக சொல்லலாம்.