-->

History of Pondicherry in Tamil - தமிழ்நாட்டுக்கு அருகில் ஒரு பிரான்ஸ்! -

3 minute read

புதுச்சேரி என்றாலே நம் நினைவில் வருவது பிரெஞ்சுக்காரர்களின் கட்டமைப்பு, கடற்கரைகள், ஜிப்மர் மருத்துவமனை, ஆரோவில் மற்றும் படகு இல்லம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இப்புதுவைக்கு பல சிறப்புகளும் உள்ளது. எடுத்துக்காட்டாக புதுச்சேரிக்கு என தனியாக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. கிழக்கு கடற்கரையில் ஸ்கூபா டைவிங் அமைந்துள்ள ஒரே இடம் புதுவை தான். மூன்றாம் பெரிய காந்தி சிலை இங்கு தான் அமைந்துள்ளது. புதுவை திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு பழங்கால நகரமாகும்.


History of Pondicherry in Tamil

புதுச்சேரியின் வரலாறு:

ஆய்வுகளின் தரவின்படி  4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை காஞ்சியை ஆண்ட  பல்லவர்கள் புதுவையை ஆண்டுள்ளனர். பின்னர் இடைக்கால வரலாற்றில் சோழர்களிடமும், 13 ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். இதிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர  பேரரசின் கீழ் புதுவை இருந்துள்ளது. இதற்கு பின் பீஜப்பூர் சுல்தான் புதுவையை கைப்பற்றுகிறார்கள்.இன்றைய நவீன புதுச்சேரிக்கு வித்திட்டதும் இவர்கள் தான். 

புதுச்சேரியில் முதல்முதலில் 16 ஆம் நூற்றாண்டில் வணிக மையங்களை போர்த்துக்கீசியர்கள் அமைத்தனர். இவர்களுக்கு பின் டச்சுக்காரர்கள் கி.பி 1657 ல் புதுவையை வந்தடைந்தார்கள். இவர்கள் மீது நம்பிக்கையை இழந்த பீஜப்பூர் சுல்தான் பிரெஞ்சுக்காரர்களுக்கு புதுவையில் வணிகம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறார். காலனிகளாக நுழைந்த பிரெஞ்சு வணிகர்கள் சிறிது சிறிதாக புதுவை வரத் தொடங்கினார்கள். 

பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி 
கி.பி 1664 ஆம் ஆண்டு  தோற்றுவிக்கப்பட்டது. கி.பி 1670 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு, ஒரு குழுவை புதுச்சேரியில் வணிக வளாகம் அமைப்பதற்காக ஆய்வு செய்ய அனுப்புகிறது. இக்குழுவும் ஒரு சிறப்பறிக்கையை அனுப்புகிறது. பிரெஞ்சுக்காரர்கள கி.பி 1674 ஆம் ஆண்டு செஞ்சி பீஜப்பூர் சுல்தானின் ஆளுநர் மூலமாக புதுச்சேரியை உரிமையாகப் பெற்றனர். இதன் பின்னர் தான் அதாவது கி.பி 1675 ஆம் ஆண்டுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களுக்கு பல வகைகளில் ஒரு முக்கியமான இடமாக புதுச்சேரி மாறியது. 
 
கி.பி 1703 ஆண்டு வாக்கில் 700 பிரெஞ்சுக்காரர்களையும், 30000 இந்தியர்களையும் கொண்ட ஒரு மிகப்பெரிய கடல் வணிக நகரமாகவும், பிரெஞ்சுக்காரர்களின் குடியிருப்பாகவும் புதுவை விரிவடைந்தது. படிப்படியாக புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. அதேசமயத்தில் உலகளாவிய கடல் வாணிபத்தில் முக்கிய நகரமாகவும் விளங்க தொடங்கியது. பிரெஞ்சு ஆட்சிகாலத்தில் ஆளுநராக இருந்த லீ நாயர் ஆட்சிக் காலத்தில் கி.பி 1720 கேரளாவில் உள்ள மாஹியையும், கி.பி 1730 ல் ஆந்திரப் பகுதியில் உள்ள யானம் பகுதியையும் பிரெஞ்சு ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆளுநர் துய்மாவின் காலத்தில் காரைக்காலும் இணைக்கப்பட்டது. 
கி.பி 1739ல் ஒரு பெரிய வணிக வளாகமும் கட்டப்பட்டது.

Joseph marquis dupleix  இவர் புதுச்சேரி சரித்திரத்தில் மிக முக்கியமான ஆளுநராக கருதப்பட்டார். இவருடைய ஆட்சி காலம் கி.பி 1742 முதல் கி.பி1754 வரை ஆகும். இவர் வணிகத்தையும் தாண்டி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தினார்.இவரின் அரசியல் பங்களிப்பும் புதுச்சேரியின் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கித்து. குறிப்பாக இவர் இந்தியாவில் உள்நாட்டு சண்டைகளிலும் தலையிட்டு ஆங்கிலேயர்களுக்கு முன் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.முதல் கர்நாடகா போரின்(கி.பி 1746) போது பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைக் கைப்பற்றியப் போது , ஆங்கிலேயர்கள் புதுச்சேரியை முற்றுகையிட்டனர். கி.பி 1750ல் நடந்த இரண்டாம் கர்நாடகா போரில்  ஃபுஸ்ஸி எனும் பிரெஞ்சு தளபதி செஞ்சியை கைப்பற்றுகிறார்.இவர் செஞ்சியை கி.பி 1750 முதல் கி.பி 1761 வரை ஆட்சி செய்தார்.

புதுச்சேரி வரலாற்றில் பிரெஞ்சுக்காரர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் பல மோதல்கள் ஏற்பட்டன. இறுதியில் புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே ஒப்பந்த உடன்படிக்கை கையெழுத்தாகி மோதல்களும் முடிவுக்கு வந்தன. கி.பி 1814 ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கையிக்கு  பின் ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரெஞ்சு பகுதிகளைகப் பிரெஞ்சுக்காரர்களிடமே ஒப்படைத்தனர். புதுச்சேரியும் தன் வரலாற்று பயணத்தை முடித்துக் கொண்டது.
 

அரிக்கமேடு:

புதுச்சேரியின் பழங்கால வரலாற்றை நாம் பேசினால் அரிக்கமேட்டை நம்மால் தவிர்க்க முடியாது. ஏனெனில் சுமார் முதல் நூற்றாண்டில் தொடங்கி 2000 ஆண்டுகளுக்கான வரலாற்றை தன்ணுள் தாங்கிக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் தொல்லியல் துறை செய்த ஆய்வில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் ரோமானியர்கள் வந்து, வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த ரோமானியர்களின் ஆதாரங்கள் கி.மு  முதல் நூற்றாண்டு முதல் கி.பி முதல் நூற்றாண்டிக்கு இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தியவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியின் அரிக்கமேடு சங்க காலத்தில் "அலங்கார மணிகளின் தாயகம்" என அயல் நாட்டினரால் பாரட்டுப் பெற்ற ஒரு இடமாகும். 
இன்றும் ரோமானியர்களின் கலாச்சாரம் சார்ந்த பொருட்களும், அவர்கள் பயன்படுத்திய காசு, மண்பாண்டங்கள் முதலியன புதுச்சேரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தனியாக சுதந்திர தினம் கொண்டாடப்படுவது ஏன்? 

இந்திய நாடு பிரிட்டிஷிடம் இருந்து விடுதலை பெற்ற போது புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் கீழ் இருந்தது. இவைகள் அளவில் மிகச் சிறிய நகரங்களாக இருந்ததாலும், பல்வேறு காலச்சாரங்களைக் கொண்டிருந்ததாலும், நடைமுறையில் மாநிலமாக ஏற்றுக்கொள்ள சாத்தியமில்லாத நிலை இருந்தது. ஆகையால் அப்போதைய இந்திய அரசு புதுச்சேரி, டையூ டாமன் , அந்தமான் நிக்கோபார் போன்ற இடங்களை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்திய விடுதலைக்குப் பின் புதுச்சேரியும் தீவிர விடுதலைப் போரில் இறங்கியது. இறுதியாக 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ல் விடுதலையும் பெற்றது. இந்தியாவுடனும் இணைந்துதது. இந்த ஒப்பந்தத்தையே De Facto Settlement என்கிறோம்.

புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் காரைக்காலும், கேரளாவில் தலைச்சேரிக்கு 7கி.மீ தொலைவில் மாஹியும், ஆந்திராவில் காக்கிநாடாக்கு தெற்கில் ஏணமும் இப்படி புதுச்சேரிக்கு தனித்தனியாக  பகுதிகள் இருந்ததால், அவற்றை இணைத்துக்கொள்ள இயலாது காரணத்தால் கி.பி 1956 ல் இந்தியாவிற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக கி.பி 1962 ஆகஸ்ட் 16ல் அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவும், பிரெஞ்சு தூதுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர், இதுவே" டீ ஜோர் டிரான்ஸ்வர் "என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக இந்திய அரசியலமைப்பு சட்டம் 7 ஆவது திருத்தத்தின் படி  புதுச்சேரி இந்திய அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியது.