-->

History of Indian Pride ISRO in Tamil.இந்தியப் பெருமிதம் இஸ்ரோவின் வரலாறு தமிழில்

8 minute read

 2019 ஆம் ஆண்டு நாட்டு மக்களிடம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வந்த அறிவிப்பு , நாடு முழுவதும் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் ரீதியான அறிவிப்பாக தான் இருக்கும் என ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கின. சிலர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் போல அதிரடியாக இருக்கும் என பீதியை கிளப்பினர். ஆனால் இந்திய மக்கள் பெருமிதம் கொள்ளும் சாதனை ஒன்றை அறிவித்தார் பிரதமர் மோடி. விண்வெளியில் இருக்கும் நமது செயற்கை கோள்களை எதிரிகள் அழிக்க முயற்சிக்கும் பட்சத்தில் அதை முறியடிக்க கூடிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு விண்வெளித் துறையில் இந்தியா வலிமை வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமையாக கூறினார். வானிலைத் தொடங்கி மொபைல் போனில் பேசுவது என அனைத்துமே செயற்கை கோள்களை நம்பியே உள்ளது. செயற்கை கோள்கள் என்பதை விட விண்வெளியை நம்பித்தான் உள்ளது எனலாம்.


History of Indian Pride ISRO in tamil

விண்வெளி பயணத்தில் இந்தியாவின் தொடக்கம்:

விண்வெளிக்காணப் போட்டி நாடுகளுக்கிடையே கூடிய விரைவில் வெடிக்கும் எனும் எச்சரிக்கை மணி கடந்தப் பத்து ஆண்டுகளாகவே அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த சோதனையில் 300 கி.மீ தொலைவில் இருந்த செயற்கை கோள்களை, மூன்றே நிமிடத்தில் ஏவுகணைக் கொண்டு அழிக்கப்பட்டிருப்பது  இந்தியாவின் பாதுகாப்பிற்கு வலிமை சேர்த்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த சாதனையில் பெரும் பங்கு DRDO என அழைக்கப்படும் ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கே சேரும் என்பதிலும் சந்தேகமில்லை. இருப்பினும் இன்று விண்வெளி துறையில் இந்தியாவிற்கு பாதுகாப்பு தேவைப்படும் அளவிற்கு சாதனைகளை குவித்து வரும் நிறுவனம் இஸ்ரோ(ISRO).மேலும் நம் நாட்டின் மீது உலக நாடுகள் பொறாமைக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நிறுவனங்களில் முதன்மையான இடத்தில் இருப்பது இஸ்ரோ என்பதையும் மறுத்துவிட முடியாது. இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் , பல சாதனை சரித்திரங்களைப் புரிந்து நமது தாய்திரு நாட்டை உலக அரங்கில் ஒளிரச் செய்துக் கொண்டிருக்கும் விண்மீன். பூமி, சந்திரன், செவ்வாய் என எனப் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் தனது ஆராய்ச்சி தளத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரோ தற்போது அமெரிக்கா, ரஷியா , சீனா என முன்னனி நாடுகளும் வியந்து பார்க்கும் வகையில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பெரும் சவாலான திட்டத்தில் இறங்கியுள்ளது. தலைசிறந்த விஞ்ஞானிகள், உயரிய தொழில்நுட்பம் , குறைந்த பொருட்செலவு என இஸ்ரோவின் வியத்தகு ஆராய்ச்சிகளைப் பார்த்து அண்ணாந்து பார்க்கின்றன அயல் நாடுகள். இத்தைகைய வளர்ச்சியைப் பிடிக்க இஸ்ரோ கஸ்டம் சிறிதல்ல.இந்த அறிய தகவல்களை நாம் அறிந்தக்கொள்ள சுமார் 60 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 


இஸ்ரோவின் தொடக்கம்:

          விக்ரம் சாராபாய் இவர் தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தந்தை என அறியப்படுபவர். 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பம்பாய் மாகாணத்திற்கு உட்பட்ட அகமதாபாத்தில் பிறந்தார் விக்ரம் சாராபாய். குஜராத் கலை அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் , இயற்பியலில் நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன், டாக்டர் பட்டம் ஆராய்ச்சியின் போது விக்ரம் சாராபாய் அவர்களுக்கு ஆலோசகராக இருந்தார். அறிவியல் படிப்புகளுக்குப் பின் முன்னனி விஞ்ஞானியாக உருவெடுத்த விக்ரம் சாராபாய் கடந்த 1962 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவுடன் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்கான கமிட்டி ஒன்றை உருவாக்கினார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமும் ஒரு உறுப்பினர். ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1969 ல் அந்தக் கமிட்டி "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் "எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு தங்கள் ஆராய்ச்சி பணிகளை விண்ணை நோக்கி முன்னெடுக்க ஆரம்பித்தது இஸ்ரோ. விண்வெளிக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு , பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1960 களில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மனிதனை விண்ணுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்த காலகட்டத்தில் தான் தன்னுடைய ஆரம்பத்தை தொடங்கியது இஸ்ரோ. 


இஸ்ரோவின் முயற்சி:

முதன் முதலாக செயற்கை கோளை வடிவமைத்த இஸ்ரோ , அதற்கு இந்திய வானியல் சாஸ்திர வல்லுநர் ஆரியபட்டரின் பெயரை சூட்டியது. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி சோவியத் யூனியனின் இன்டர்காஸ்மாஸிஸ் உதவியுடன் ஆரியப்பட்டரை விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. செயற்கை கோளின் செயல்பாடுகள் தெம்பூட்ட , அடுத்ததாக தொலைத் தொடர்பு, புவி அறிவியலுக்கான பாஸ்கரா செயற்கை கோளை உருவாக்கி அதே சோவியத் யூனியன் உதவியுடன் விண்ணில் ஏவியது. விண்வெளி திட்டங்களை விரிவுப்படுத்த விஞ்ஞானி  அப்துல் கலாம் தலைமையிலான  குழுவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதனையடுத்து அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள நாசாவின் ஆராய்ச்சி மையம், மேரிலாந்தில் உள்ள ராக்கெட் தயாரிப்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்ட அப்துல் கலாம் நாடு திரும்பி SLV, PSLV ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியை முன்னெடுத்தார். தொடர்ந்து பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிறிய கோள்களை நிலைநிறுத்த 1990 களில் "போலார் சாட்டிலைட் லான்ச்சிங் வெகில்" எனும் PSLV ஏவு வாகனங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியது இஸ்ரோ. 1993 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல் PSLV தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. அன்றுத் தொடங்கிய PSLV யின் இந்த பயணம் சுமார் 25 ஆண்டுகளாக இன்றும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. விண்ணில் இதுவரை செலுத்தப்பட்ட 45 PSLV வாகனங்களில் 41 வெற்றியடைந்தது. PSLV தொழில்நுட்பத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு இது வலுவூட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு, செல்போன், DTH சேவைகள், புவி கண்காணிப்பு, புயல், மழை, பேரிடர், வானிலை நிலவரங்கள், வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு PSLV மூலம் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி வருகிறது இஸ்ரோ. இராணுவப் பயன்பாட்டிற்காக செயற்கை கோள்களை ஏவி எல்லையில் எதிரிகளின் நடமாட்டம், ஊடுருவல்களை கண்காணித்து அதற்கேற்ப இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது மத்திய அரசு. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் PSLV யின் பங்கு அளப்பரியது. PSLV ராக்கெட்டுகள் தற்போது வெற்றிகரமாக பயணிக்க அப்துல்கலாமின் பங்களிப்பை மறக்க முடியாது. 


விண்வெளி ஆராய்ச்சியில் சதீஷ்தவானின் சேவையும் முக்கியமானது. காஷ்மீரில் பிறந்த சதீஷ்தவான் விண்வெளி பொறியாளர் ஆவார். "இந்தியாவின் Fluid Dynamics ஆராய்ச்சியின் தந்தை" எனப் போற்றப்படும் இவர் ,இஸ்ரோ ஏவிய தொலைத்தொடர்பு, கிராம கல்விக்கான செயற்கை கோள்களை வடிவமைக்க முக்கிய பங்காற்றியவர். விக்ரம் சாராபாய் அவர்களுக்கு பின் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு இஸ்ரோவை வெற்றிப்பாதையில் அழைத்து சென்றவர் சதீஷ்தவான். ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு சதிஷ்தவானின் பெயர் சூட்டப்பட்டிருப்பது என்பதன் மூலம் அவரது சேவை எந்த அளவிற்கு இருந்திருக்க கூடும் என்பதை உணர வேண்டும். 


இஸ்ரோவின் அடுத்தடுத்த நகர்வு:

பூமி,புவியியல் ஆராய்ச்சிகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு சந்திரணின் பக்கம் தனது பார்வையை திருப்பியது இஸ்ரோ அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைப் போன்று நிலவுக் குறித்து ஆராய விரும்பிய இந்திய அரசு அதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு இஸ்ரோவை அறிவுறுத்தியது. 2003 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது நிலவுக் குறித்த ஆராய்ச்சி திட்ட அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார் அப்போதைய பிரதமர் திரு.வாஜ்பாய். வானியல் விஞ்ஞானிகள், புவி அறிவியல், வேதியியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முன்னனி விஞ்ஞானிகள் என 100 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. திட்டத்திற்காக 525க் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சந்திராயன் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான விஞ்ஞானிகளின் அயராது உழைப்பினால் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 1 விண்கலத்தை சுமந்தப்படி விண்ணில்  சீறிப்பாய்ந்தது PSLAXL C-11 ராக்கெட் அமெரிக்கா, சீனா, ரஷ்யா நாடுகள் நிலவை ஆராய்ச்சி செய்ததற்கான தடத்தை பதிப்பதற்காக தங்களது நாட்டு கொடிகளை நிலவின் பரப்பில் விட்டுசென்றனர் , இதனால் நிலவில் இந்தியாவின் கொடியும் இடம்பெற வேண்டும் எனக் கூறிய அப்துல்கலாம். Moon impact Probe ஒன்றினை சந்திராயன் திட்டத்தில் இணைத்து அந்தக் கருவிக்கு நமது தேசியக் கொடியின் மூவர்ணம் பூசப்பட்டது . நிலவின் மேற்பரப்பில் Moon impact probe மோதியப் போது மோதிய போது வெளிப்பட்ட புழுதிப் படலத்தை படமெடுத்தது சந்திராயன். நிலவின் சுற்றுவட்டபாதையில் 3400 க்கும் அதிகமான முறை சுற்றி வந்த சந்திராயன் , நிலவின் அமைப்பு குறித்து பல்வேறு விதமான அறியப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.


சந்திரனை தொடர்ந்து சூரிய மண்டலத்தின் நான்காவது கிரகமும் , பூமிக்கு அருகில் உள்ள கிரகமான செவ்வாய் கிரகத்தை குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ள திட்டமிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அதற்கான வரைவு திட்டத்தை தயாரித்து , மத்திய அரசிடம் இருந்து ஒப்புதலையும் பெற்றது இஸ்ரோ. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பூர்வாங்கப் பணிகளுக்கு 2012 ஆகஸ்ட்டில்  ஒப்புதல் அளித்தார் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங். மங்கள்யான் ஆராய்ச்சி திட்டத்துக்காக 454 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது . சுமார் ஐந்து ஆண்டு கால முயற்சிக்கு பின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி PSLVXL C-25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது மங்கள்யான். சுமார் ஒன்பது மாதங்கள் பயணத்திற்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது மங்கள்யான். செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நுழைய முடியாமல் அமெரிக்கா, ரஷ்யா செயற்கை கோள்கள் ஆரம்ப நிலையில் தோல்வியை தழுவியது நிலையில், முதல் சோதனையிலேயே வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக விண்கலத்தை நிலைநிறுத்தியது இஸ்ரோ. சர்வதேச நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க செய்தது இந்த நிகழ்வு. அதிலும் குறிப்பாக நாசா செவ்வாய் கிரக ஆய்வுக்காக செலவிட்ட தொகையை விட இஸ்ரோ பத்து மடங்கு குறைந்த செலவில் திட்டத்தை நிறைவேற்றியது,விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் அசுர வளர்ச்சியை பறைசாற்றியது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பாவைத் தொடர்ந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்ட நான்காவது நாடு என்றப் பெருமையைப் பெற்றுள்ளது இந்தியா. ஆசியக் கண்டத்தில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என மார்தட்டிக் கொண்டது இந்தியா. 


இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கோள் குறித்த எதிர்கால ஆராய்ச்சிகளுக்காக ஓடோடிவந்து இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டது அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம். மங்கள்யாணின் வெற்றிப் பயணம் ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்க, சந்திராயன் 2 திட்டத்திற்கான பணிகளை முடக்கி விட்டது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். இந்த முறை நிலவில் விண்கலத்தை தரையிறக்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் திட்டங்களை முன்னெடுத்தது இஸ்ரோ. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டால் மற்றும் நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்யும் லாண்டர், ரோவரை உள்ளடக்கிய சந்திராயன் 2 திட்டம் வடிவமைக்கப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் இறங்கும் லாண்டர் கருவியை , ரஷ்யா தயாரித்து தர 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் போடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை இதற்கான ஒப்புதல் அளித்தது. இந்திய விண்வெளி ஆய்வு திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் விக்ரம் சாராபய் நினைவாக நிலவில் தரையிறங்கும் லாண்டர் கருவிக்கு விக்ரம் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் 2015 ஆம் ஆண்டு நிலவில் தரையிரங்கும் கருவியை தங்களால் தர முடியாது என ரஷ்யா பின்வாங்கிய நிலையில், எதற்கும் அச்சப்படாமல் உள்நாட்டிலேயே லாண்டர் தயாரிக்கும் பணியில் இறங்கி, அதஅதனை வெற்றிகரமாக முடித்திருக்கிறது இஸ்ரோ. இந்த முறை சுமார் 3800 கிலோ எடையை ஏந்திச் செல்ல PSLV யால் முடியாது என்பதால் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் GSLV MK3 மூலம் விண்கலத்தை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரவ எரிப்பொருட்களைக் கொண்டு மிகக்குறைந்த எடையையும் விண்ணில் செலுத்த முடியும். பல டன் எடையை சுமந்து செல்ல எவு வாகனத்திற்கு கிரையோஜெனிக் தொழில் நுட்பமே தேவைப்படும். 

கிரையோஜெனிக் தொழில்நுட்பம்:

அதாவது ஏவு வாகனத்தின் முதல் இரண்டு எரிபொருள் நிலைகளில் திட திரவ எரிபொருள்கள் இருக்கும். கடைசி எரிபொருள் நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஆக்ஸிஜன் வாயுவை -180 டிகிரிக்கும் கீழ் குளிர்வித்தும் , ஹைட்ரஜன் வாயுவை -250 டிகிரிக்கும் கீழ் குளிர்வித்தும் , இவ்விரு வாயுக்களையும் நீர்மமாக உருமாற்றி மிகக்குறைந்த அழுத்தத்தில் அதனை எரிபொருளாக பயன்படுத்தி ராக்கெட்டை நீண்ட தூரத்திற்கு செலுத்துவதே இந்த கிரையோஜெனிக் தொழில்நுட்பம். 

2001 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவிடம் இருந்து கிரையோஜெனிக் என்ஜின்களை ரஷ்யாவிடம் இருந்து விலைக்கொடுத்து வாங்கியே GSLV ராக்கெட்டுகளை ஏவி வந்தது இஸ்ரோ. இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யா,இந்தியாவிற்கு வழங்குவதை தடுத்து நிறுத்திவிட்டது அமெரிக்கா.  இதனால் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு 20 ஆண்டுகள் உழைத்து உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரித்து பல தோல்விகளிலிருந்து மீண்டு , தற்போது GSL ஏவு வாகனங்களை செலுத்தி வருகின்றது என்றால் , இந்திய விஞ்ஞானிகளின் திறமையை  உலக நாடுகள் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. வர்த்தக, வணிக ரீதியிலும் செயற்கை கோள்கள் ஏவுவதிலும் இஸ்ரோவின் பணிகள் அளவிட முடியாதவை. குறைந்த செலவில் செயற்கை கோள்களை ஏவுவதால்,தங்கள் நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவை தேடி வரிசையில் வந்து நிற்கின்றன அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற முன்னணி நாடுகள். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரே நேரத்தில் 104 செயற்கை கோள்களை ஏவி , இஸ்ரோ புரிந்த உலக சாதனையை இன்றளவும் எந்த ஒரு வல்லரசு நாடும் முறியடிக்கமுடியவில்லை. இந்திய விஞ்ஞானிகள் விஞ்ஞானத்தையும், மதிநுட்பத்தையும் கண்டு வியந்துள்ளனர் அயல்நாட்டு விஞ்ஞானிகள். 


இஸ்ரோ மீதான சர்ச்சைகள்:

இப்படி இஸ்ரோவின் சாதனைகள் நீண்டுகொண்டே சென்றாலும், இன்னொரு பக்கம் மற்ற துறைகளைப் போல ஊழல், முறைகேடு, சர்ச்சைகள் தொற்றிக்கொள்ளாமல் இல்லை, வர்த்தக செயல்பாடுகளை கவனித்து வரும் இஸ்ரோவின் ஒரு அங்கமான ஆன்றிக்ஸ் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தேவாஸ் என்ற நிறுவனத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் முறைக்கேடுகள் இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தன. வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக  579 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்ததாக புகார் எழுந்தது. அமெரிக்காவில் "தேவாஸ் மல்டிமீடியா அமெரிக்கா" என்ற பெயரில் சார்பு நிறுவனத்தை தொடங்கி முதலீடுகள் திரட்டப்பட்டன. முதலீடு, மானியம் எனப் பல்வேறு வழிகளில் இந்தியாவிற்குள் நிதிக் கொண்டுவரப்பட்டன. இவ்விவகாரம் பெரும் புயலைக் கிளப்ப CBI,அமலாக்க அதிகாரிகள் விசாரணை களத்தில் இறங்கினர். தேவாஸ் அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதுடன், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம், விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன. விசாரணையின் இறுதியில் ஆன்றிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி அளவிற்கு தேவாஸ் நிறுவனத்தின் சொத்துகளும் முடக்கப்பட்டன. இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்ட தேவாஸ் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் இந்தியாவை விட்டு தப்பி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இப்படி ஆன்றிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் பெரும் விவாதப் பொருளாக மாறி உள்நாட்டில்  இஸ்ரோவின் நற்பெயருக்கு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையிலும் ஊழலா என அதிர்ந்தனர் மக்கள். 

இப்படி இஸ்ரோவில் சர்ச்சைகளும், முறைக்கேடுகளும் வெளிப்பட்டாலும் மற்றொரு பக்கம் , மற்றொரு பக்கம் சாதனைத் திட்டங்களும், பயணங்களும் விண்வெளியில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழக விஞ்ஞானிகளின் சேவையை நினைவுக் கூர்ந்தே ஆக வேண்டும். அப்துல்கலாம், நம்பி நாராயணன், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் என இஸ்ரோவில் தமிழர்களின் பங்கும், உறவும் இன்றளவும் நீண்டுகொண்டே தான் வருகிறது. விண்வெளி அரங்கில் இந்தியாவின் பெயர் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இஸ்ரோவை பற்றி இங்கு பதிவு செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.