-->

History of SuperStar Rajnikant in Tamil.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வரலாறு தமிழில்

5 minute read

ரஜினியின் அறிமுகம்:

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் கதவைத் திறந்து 45 ஆண்டுகள் கடந்துவிட்டது. 1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக கோலோச்சிக் கொண்டிருந்தக் காலம் அது. இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக உருவெடுத்த "அபூர்வராகங்கள்" படத்தில் தோய்ந்துப்போன தேகம், கருப்பு நிறம், அடர்த்தியான தாடி மீசையுடன் சுமார் முகம் சிவாஜியாக கெத்தாக நடந்து வந்து ஸ்டைலாக தமிழ் சினிமாவில் நுழைந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சிவாஜிராவை ரஜினிகாந்த் ஆக மாற்றி அவரின் பெயரிலேயே காந்தத்தை சேர்த்த கே. பாலச்சந்திரன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களிலும் அந்த காந்தத்தை ஒட்ட வைத்தார். அபூர்வராகங்களுக்கு பிறகு தெலுங்கு,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கே. பாலச்சந்திரனின் "மூன்றுமுடிச்சு" படத்தில் தான் ரஜினிகாந்த் ஒரு தேர்ந்த நடிகராக தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். மூன்றுமுடிச்சு திரைப்படம் தான் தமிழ் திரையுலகில் ரஜினியின் நடிப்பாற்றலை மிக அழுத்தமாக பதிவு செய்தது. 

மூன்று முடிச்சில் சிறந்த நடிகராக உருவெடுத்த ரஜினி, கே.பாலசந்திரனின் அடுத்தப்படைப்பான"அவர்கள்"திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். இதன் பிறகு சிவகுமார் கதாநாயகனாக நடித்த "கவிபுயல்" படத்தில் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்த ரஜினிகாந்த்,அதே சிவகுமார் வில்லனாக நடித்த "புவனா ஒரு கேள்விகுறி" படத்தில் நல்லவராக உருவெடுத்து தன் நடிப்பு திறமையை காட்டினார். இயக்குனர் S.P முத்துராமனுடன்,ரஜினி முதல் முதலாக  கைக்கோர்த்த இப்படம் அந்த ஆண்டின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரை ரசிகர்களுக்கு  விருந்து படைத்தார். இதன் பிறகு இவர் நடித்த "பதினாறு வயதினிலே", மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதன் பின்னர் தான் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராக வண்ணம் தீட்டுவதற்கான தூரிகையை கையிலெடுத்தார் தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் ஆன கலைஞானம்.இவர் ரஜினிகாந்தை கட்டயாபடுத்தி "பைரவி"என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அதுமட்டுமின்றி பைரவி படத்தின் விநியோக உரிமையை வாங்கிய கலைக்குடி தாணு சென்னை பிளாசா தியேட்டரில் 35 அடிக்கு கட் அவுட் வைத்து ரஜியின் திரைப்படத்திற்கு வரவேற்பு அளித்தார். தமிழ் சினிமா விற்கு ஒரு புதிய கதாநாயகன் கிடைத்துவிட்டார் என்ற செய்தியை அந்தக் கட்அவுட் ஓங்கி ஒலித்தது. இதனைத் தொடர்ந்து கலைக்குடி தாணு அவர்கள், "தி கிரேட் சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் நடிக்கும் "பைரவி" என்று பைரவி படத்திற்கு போஸ்டர் அடித்து ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் வழங்கினார். கதாநாயகனாக உருவெடுத்து, சூப்பர் ஸ்டார் என முடி சூடப்பட்டு, கட்அவுட் வைத்த பின்புக் கூட ரஜினிகாந்த் அவர்கள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய பெருந்தன்மையை எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களிடம் தன்னுடைய பெருந்தன்மையை காட்டினார்.


History of SuperStar Rajnikant in Tamil

சூப்பர் ஸ்டாரின் விடாமுயற்சி:

1978ல் ஒரே ஆண்டில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தமிழக திரையரங்குகளை அசராமல்  அலங்கரித்தார் ரஜினிகாந்த்.இப்படி கட்டுக்குள் அடங்காத கட்டாறுப் போல் ஓடிக்கொண்டிருந்த ரஜினியை தன்னுடைய தனித்துவமான திரைக்கதையால் அணைக் கட்டி பிடித்தார் இயக்குநர் மகேந்திரன். இவர் "முல்லும் மலரும்" படத்திற்கு, தயாரிப்பாளரின் எதிர்ப்பையும் மீறி ரஜினி அவர்களை நாயகனாக நடிக்க வைத்தார். கே. பாலசந்தர் அவர்களால் ரஜினியாக  உருப்பெற்றவர் , தமிழ் சினிமாவில் சூறாவளியாக சுற்றியாடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து மீண்டும் பாலசந்தர் அவரிடமே திரும்பினார். இவர் ரஜினி வைத்து இயக்கிய தப்பு தாளங்கள் படத்தில் , திராவிட முகத்தாலும் , நேர்த்தியான நடிப்பாலும் 80 களில் தமிழ் இளைஞர்களை கட்டிப்போட்ட நடிகை சரிதா அறிமுகமானார். ஆண்டு முழுவதும் கலைப்பில்லாமல் ஓடிய ரஜினிக்கு இதன் பிறகு தான் தொடங்கியது இருண்ட காலம். சிறிது கூட ஓய்வில்லாமல் ,இரவுப் பகல் பாராமல் ஓடி உழைத்த ரஜினி கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். சிறிது நாட்களுக்கு ஓய்வு எடுத்தால் மட்டுமே உடல் நிலை சீரடையும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் தன்னுடைய திரை வாழ்விற்கு பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டதாகவே உணர்ந்தார் ரஜினி.


சீறப்பாய்ந்தக் காளை:

சிகிச்சைக்கு பின் மீண்டும் சீறப்பாய்ந்தக் காளைப் போல ரஜினி அவர்கள் கமலுடன் சேர்ந்த படம் தான் "நினைத்தாலே இனிக்கும்".சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற ரஜினி அவர்கள் இப்படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்தாலும் அவருக்கே முதல்மதிப்பெண் கிடைத்தது. இப்படத்தில் இவருக்கு கிடைத்த பாராட்டுகளால் இனி ரஜினி அவர்களும் கமல் அவர்களும் சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர். ரஜினி அவர்களுக்கு இக்காலப் பகுதியில் தான் ரசிகர் பட்டாளமும் பெருகியது. ரஜினியும் கமலும் ஆளுக்கொரு துருவத்தை நோக்கி பயனிக்கத் தொடங்கிய போதே , ரஜினியா? கமலா எனும் ரசிகர் போரும் தொடங்கியது. தனித்துவமான நடிப்பால் விதவிதமான கதாபாத்திரத்திங்களுக்கு உயிர்க் கொடுத்துக் கொண்டிருந்த ரஜினி,சிறிது சிறிதாக தன்னுடைய வழியை மாற்ற ஆரம்பித்தார். இதன்பிறகு "அன்னை ஒரு ஆலயம்", "பில்லா","அன்புக்கு நான் அடிமை" என மசாலா படங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்த ரஜினி வாழ்க்கையில் வானவேடிக்கையான படம் தான் "பில்லா",பில்லாவில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி அப்படத்தில் சர்வதேசக் கடத்தல் மன்னனாக சர்வசாதாரணமாக விளையாடினார். இப்படம் அக்காலத்திலேயே 200 நாட்கள் ஓடியது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் பொல்லாதவன் ஆக மாறிப்போனார் ரஜினி. அடுத்து இவர் S.P முத்துராமனின் இயக்கத்தில் "முரட்டு காளை" என்னும் படத்தில் நடித்தார். இப்படி இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்த ரஜினி ஜகன்நாதன் இயக்கத்தில் மூன்று முகம் காட்டினார். அடுத்ததாக "தம்பிக்கு எந்த ஊரில்" பணக்காரணாகப் பிறந்து கிராமத்திற்கு சென்று அப்பழக்கவழக்கஙகளை வெகுளியாக கற்று ரசிகர்களை சிறிக்க வைத்தார். இதன் பிறகு இவர் நடித்த "மாப்பிள்ளை", "ராஜாதி ராஜா", "மனிதன்" போன்ற திரைப்படங்கள் ரஜினியின் பெயரை மேலும் பிரபலப்படுத்தியது. இதையடுத்து இவர் நடித்த "அண்ணாமலை" திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வெற்றியடைந்தது.


பிரம்மாண்ட வெற்றிகள்:

"பாண்டியன்","எஜமான்", "உழைப்பாளி" எனப் பயணம் செய்த ரஜினி மீண்டும் சுரேஷ் கிருஷ்ணா, தேவாவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் "பாட்ஷா" வில் விஸ்வரூபம் எடுத்தார். அவர் முன்னர் நடித்த தளபதி, முல்லும் மலரும் போன்றப் படங்களுக்கே சவால் விடும் வகையில் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார். ரஜினியை வைத்து வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடியாது எவர் மாஸ் டான் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்ததாக கெத்தான ரஜினிக்கு, சத்தான திரைக்கதையுடன் கைக்கொடுத்தார் கே.எஸ் ரவிக்குமார். இவர் ரஜினியை வைத்து இயக்கியப் படம் தான்"முத்து". இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தமிழக வீதிகள் தோறும் ஒலிக்க ஆரம்பித்தது. இப்படத்தில் தான் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் முதல் முறையாக ரஜினியுடன் கைக்கோர்த்தார். இதைத் தொடர்ந்து இவர் ரஜிணிக்காக "படையப்பா', "பாபா", "சிவாஜி", "எந்திரன்"என அடுத்தடுத்தப் படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களின் நாடிநரம்பை ஆடவிட்டன. முத்துவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதேக் கூட்டணி படையப்பாவிற்கு படையெடுத்தது. இப்படத்தில் ரஜினி நீலாம்பரிக்கு எதிராக செய்த செயல்களுக்காக தமிழ் மக்கள் இப்படத்திற்கு பிரம்மாண்ட வெற்றியை காணிக்கையாக்கினார்.இக்காலகட்டத்தில் ஆன்மீகத்தில் மூழ்கிப்போன ரஜினி, ஆன்மீக அரசியலைப் போலவே ஆன்மீக சினிமாவைக் கையிலெடுத்தார்.இந்நிலையில் அவரே கதையெழுதி உருவான "பாபா" படத்தைப் பார்த்து விட்டு மக்கள் தியேட்டரை விட்டு தெறித்து ஓடினர். இந்த தோல்விக்கு பிறகு இவர் நடித்து  2005 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் தான் "சந்திரமுகி". மாபெரும் வெற்றியடைந்த இப்படம் வசூலில் புதிய சாதனையைப் படைத்தது. ஏழு தியேட்டர்களில் முந்நூறு நாட்களுக்கு மேல் ஓடிய இப்படம், சென்னை சாந்தி தியேட்டரில் மட்டும் 890 நாட்களுக்கு ஓடியது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சரித்திர சாதனையை இப்படம் நிகழ்த்தியது. 

முதல்வன் படத்திலிருந்து தன்னிடம் அகப்படாமல் தப்பித்து ஓடிக்கொண்டிருந்த ரஜினியை "சிவாஜி" படத்தின் மூலமாக வலைப் போட்டு பிடித்தார் இயக்குநர் சங்கர். மாபெரும் பட்ஜெட்டில் தயாரான இப்படம் தான் தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி வசூல் செய்த படம் என்றப் பெயரைப் பெற்றது. இதேக் கூட்டணியில் இயக்குநர் சங்கர் தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு இயக்குநரும் சிந்திக்காத வகையில்  ரோபோவை வைத்து எடுத்தப் படம் தான் "எந்திரன்". இப்படத்தில் ரஜினி கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இப்படம் உலக அளவில் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இதன் இரண்டாவது பாகமாக வெளிவந்த படம் தான் "2.O" பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று 680 க் கோடி வசூல் செய்தது. 

இப்படி 90 's ரஜினியை ரசிகர்கள் காணாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தான் களத்தில் குதித்தார் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் ரஜினியை வைத்து இயக்கிய "கபாலி"படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தனுஷ் தயாரிப்பில் மீண்டும் இணைந்த இக்கூட்டணி "காலா"வாய் கலகம் செய்து பல தடைகளைத் தாண்டியும் வெற்றி நடைப் போட்டது. இதைத் தொடர்ந்து இவர் மேற்கொண்டு நடித்த "பேட்ட", "தர்பார்", "அண்ணாத்த" ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை நிலைநிறுத்தியது. 45 ஆண்டு கால சினிமா வரலாற்றில் இன்றளவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற இடத்தை விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய நடிப்பு திறமையால் அந்தப் பட்டத்திற்கு சொந்தக்காரராக இருந்துவருகிறார்.