தென்னிந்தியாவில் வசூல் ரீதியாகவும், கதை ரீதியாகவும் எல்லாக் காலக்கட்டத்திலும் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்தவை தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்கள் தான். மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்கள் கமர்ஷியலாக தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்கள் பெற்ற இடத்தைப் பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக கன்னட சினிமா என்றாலே பெரும்பாலும் அது மற்ற மொழி ரீமேக் சினிமாவாகவே இருந்தன.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்பத்தினரே பெரும்பாலும் கன்னட சினிமாவை ஆக்கிரமித்திருந்தனர்.இப்படிப்பட்ட சூழலில் தான் நானும் களத்தில் இருக்கிறேன் என்பதை காண்பித்தார்
யாஷ்.
இவர் நடித்த கே.ஜி.எப் முதல் பாகம் 250 கோடி வசூல் ஈட்டிய முதல் கன்னட படம் என்ற பெருமையை பெற்றது என்றால்,
கே.ஜி.எப் இரண்டாம் பாகம் 1200 கோடி வசூல் செய்த முதல் கன்னட படம் என்ற பெருமையோடு இந்தியாவையே கலக்கியது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் வெளியாகும் கன்னட திரைப்படங்களின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் அதிகரித்துள்ளது. கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் கதை காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என ஒவ்வொரு பிரிவும் ரசிக்கும் படியாக படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருந்தாலும், ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் தூக்கி நிறுத்தியது யாரென்றால் படத்தின் நாயகன் யாஷ் தான். கன்னட சினிமாவில் இரண்டாம் நிலை நடிகராக இருந்த நடிகர் யாஷை, இப்படத்தில் அவர் கொடுத்த
உழைப்பின் காரணமாக இன்று உலக அரங்கில் கன்னட சினிமாவின் முகமாக மாற்றியுள்ளது.
நடிகர் யாஷின் தொடக்கம்:
யாஷின் தொடக்ககால திரைப்பயணம் என்பது சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கப்பட்டதல்ல. சுற்றுலாவுக்கும், குளிர்ச்சியான காலநிலைக்கும் பெயர் எடுத்தது கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திலுள்ள புவனஹள்ளி பகுதி. அப்பகுதியில் நடுத்தர குடும்பத்தில் அருண்குமார்- புஷ்பா தம்பதியருக்கு 1986 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி மகனாக பிறந்தார் நவீன்குமார் கவுடா எனும் இயற்பெயர் கொண்ட யாஷ். இவரது தந்தை அருண்குமார் கர்நாடக பேருந்து போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றினார். இவர் பள்ளி நாட்களிலேயே ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பள்ளி பருவத்திலேயே தன் திறமையால் ரசிகர்களின் கைத்தட்டலால் மயங்கி போன யாஷ் எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக ஆக வேண்டும் என்ற விதையை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டார். ஆனால் அவரது குடும்ப சூழல் அதற்கான எந்த ஒரு முகாந்திரத்தையும் கொண்டிருக்கவில்லை. மாத வருமானத்தை நம்பி ஒவ்வொரு தேவைகளையும் கணக்கு போட்டு செலவு செய்யும் சாதாரண நடுத்தர குடும்பமாகவே பெற்றோர் இருந்தனர். மேலும் குடும்பத் தேவையை சமாளிக்க சாதாரண ஒரு மளிகை கடையையும் அவர்கள் நடத்தி வந்தனர். நடிகனாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தனது படிப்பை பாதியில் விட முடிவு செய்தார் யாஷ். தன் பெற்றோர்களிடம் அவர் தன் விருப்பத்தை கூறிய போது, அதிர்ந்து போனார்கள் அவரின் பெற்றோர். பெற்றோரின் அனுமதியோடு வெறும் 300 ரூபாயோடு கர்நாடகாவின் சொர்க்க பூமியான பெங்களூருக்கு தன் கனவை நனவாக்க பயணித்தார் யாஷ் .

திரைப்பயணம்:
அப்போது வாய்ப்புக்காக யாரை சென்று சந்திக்க வேண்டும் என்றுக் கூட தெரியாது, பின் நண்பர்களின் உதவியால் நவீன இந்திய சினிமாவுக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவரான இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முக திறமைகளைக்
கொண்ட பி.வி காரந்தின் பெனகா நாடகப் பள்ளியில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்தார் யாஷ். தன்னை ஒரு நடிகனாக மெருகேற்றிக் கொள்ள யாஷ் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் தான் , அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "
நந்தா கோகுலா " எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கை தொடங்கினார் யாஷ்.இவர் மேற்கொண்டு இன்னும் மூன்று தொடர்களிலும் நடித்தார். இவர் நடித்த "ப்ரீத்தி இல்லடா" எனும் தொலைக்காட்சி தொடர் இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் 2008 ஆம் ஆண்டு ஷசாங் இயக்கத்தில் வெளியான "
மோகின மனசு" திரைப்படத்தில் யாஷ் அவர்கள் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இது இவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. இப்படத்தின் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான "
பிலிம்பேர்" விருது வழங்கப்பட்டது. இதன்பின் இவர் கன்னட திரையுலகில் இரண்டாம் நிலை நடிகராக வலம்வரத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த "
ராக்கி", "
முதல சல" உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2011 ஆம் ஆண்டு, தமிழில் வெளியான "
கலவாணி" படத்தின், கன்னட ரீமேக்கான "
கிராத்தக்கா" எனும் படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்தார். இப்படம் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 2012 ஆம் இவரது நடிப்பில் வெளியான "
லக்கி", "
ஜானு" ஆகிய இரு படங்களும் ஒரே ஆண்டில் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்த ஆண்டில்
யோகராஜ் பாட் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான நகைச்சுவை படமான "
டிராமா" வசூல் ரீதியாக வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படத்தில் இருந்து தான் யாஷ் கன்னட சினிமாவில் ஸ்டார் ஹீரோக்களின் தரத்திற்கு உயர்ந்தார். யாஷின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற கன்னட சினிமாவில் தவிர்க்க முடியாத நிலையை அடைந்தார் யாஷ்.
மொழிப்பற்று:
கன்னட சினிமாவில் தன் நடிப்பு எனும் உழைப்பால் முன்னனி நடிகராக வலம்வரத் தொடங்கிய யாஷ் ஒரு கட்டத்தில் கன்னட மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் பிரச்சார பீரங்கியாக மாறினார் யாஷ். அது அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கு எதிராக கருத்தை முன்வைக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. தமிழ்நாட்டில் காவிரி நீர் கிடைக்காமல் விவசாய நிலங்கள் வறண்ட போதும் , ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தரக்கூடாது என்பதில் உறுதியாக நின்றார் யாஷ்.
பா.ஜ.கா விற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, அவரின் அரசியல் பார்வை என்ன என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பல சுவாரஸ்யமான திருப்புமுனைகளைக் கொண்டிருந்தது. யாஷின் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக "
ராக்கிங் ஸ்டார் ", என டைட்டில் வழங்கியே அவரது படங்கள் வெளியாகின. 2014 ஆம் ஆண்டு வெளியான "
கஜகேசரி" திரைப்படம் கர்நாடகாவில் 180 தியேட்டர்களில் வெளியாகி கன்னட சூப்பர் ஸ்டார்களில் தானும் இருப்பதாக அழுத்தமாக பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து வெளியான "
Mr and Mrs Ramachari" படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அவருடைய வருங்கால மனைவி "
ராதிகா பண்டிட்" நடித்திருந்தார். ஐந்து ஆண்டு காதலுக்கு பின் 2016 ஆம் ஆண்டு
தன் காதலி ராதிகா பண்டிட் அவர்களை திருமணம் செய்துகொண்டார் யாஷ். திரையுலகில் ராக்கிங் ஸ்டார் ஆக வலம் வர வெறும் படங்கள் மட்டுமே உதவவில்லை. அம்மாநில மக்களின் முக்கிய பிரச்சினைகளில் தனது ஆதரவினை தெரிவித்து வந்ததுதான் காரணம். குறிப்பாக காவேரி நதிநீர் , மகதாயி நதிநீர் பிரச்சினைகளில் யாஷ் கர்நாடகா மக்களின் கோபத்தை பிரதிபலிக்கும் நபராக இருந்தார்கள். இதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும்-கர்நாடகவிற்கும் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனைகளில் கர்நாடகா மக்களின் கோரிக்கைக்கே முக்கியத்துவம் கொடுத்தார் யாஷ்.
யாஷின் அரசியல் பார்வை:
யாஷ் ஒரு வளரும் ஹீரோவாக இருந்த 2016 ஆம் ஆண்டில் "கர்நாடகா
யாஷோமார்கா" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். 4 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் மூலம் கர்நாடகா கிராமங்களில் வறண்டு கிடக்கும் ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி யாஷின் யாஷோமார்கா கொண்டு நிறுவனம் மூலம் 50 கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தன்மாநில மக்களுக்கு எதையும் செய்யும் செய்ய துணிவதால் தான் , தன் ட்விட்டர் பக்கத்தில் "
Proud Kannadiga"எனக் குறிப்பிட்டுள்ளார் யாஷ். கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள யாஷ் 2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குறிப்பாக மைசூர் மாவட்டத்தில், கிருஷ்ணா நகர் தொகுதியில்
குமாரசுவாமியின் "ஐக்கிய ஜனதா தளம்" கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர் மகேஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் திருப்பம் என்னவென்றால், மைசூர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ்.எ இராமதாஸை ஆதரித்தும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இரு கட்சிகளுக்கும் வாக்கு சேகரித்தது குறித்து பேசிய யாஷ்
"அரசியலில் யார் நல்லவர்களோ, அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றும் , தனிப்பட்ட முறையில் இந்தக் கட்சிக்கு தான் என் ஆதரவு என்று இல்லை எனவும், மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல்வாதிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் நான் அவர்களை ஆதரிப்பேன் என்பததான் என் நிலைப்பாடு எனக்கூறினார். "
கே.ஜி.எப் தொடர்கள்:
இந்த சூழ்நிலையில் தான் கன்னட சினிமாவை புரட்டிப் போட காத்திருந்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு அறிமுகமானார் யாஷ். தன்னுடைய பொருளாதார தேவைக்காக திரைப்படங்கள், ஆவணப்படங்களை இயக்கி கொண்டிருந்தார் இயக்குநர் பிரசாந்த் நீல். இந்த நிலையில் தான் யாஷ் இவருடன் கைக்கோர்த்தார். கே.ஜி.எப் படத்தின் கதையை யாஷிடம் கூறத் தொடங்கினார் பிரசாந்த். அவர் கூறியக் கதையின் கோலார் தங்க சுரங்கம் ஒரு சிறு பகுதியாகவே இடம்பெற்றிருந்தது. அந்த சிறு பகுதியின் அழுத்தத்தை புரிந்துக் கொண்ட யாஷ், கதையை கே.ஜி.எப் லிருந்து தொடங்கும் படியாக மாற்ற முடியுமா? எனக் கேட்டுக்கொண்டார். கன்னட சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் எனும் வேட்கையுடன் காத்துக்கொண்டிருந்தார் பிரசாந்த் நீல். அதே வேட்கையுடன் சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த யாஷூம் இணைந்ததால் இந்த அணி பாய்ச்சலுக்கு தயாரானது. கட்டுக்கடங்காத இந்த வேட்கைக்கு காரணமாக இருந்தது, அவர்களின் மொழி மற்றும் மாநிலப்பற்று தான். இந்த நேரத்தில் தான் பாகுபலி எனும் பிரம்மாண்டமான திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிநடைப் போட்டுக்கொண்டு இருந்தது. இந்தப் படத்தை உத்வேகமாக எடுத்துக் கொண்ட கே.ஜி.எப் குழுவினர் , இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த பக்க பலமாக இருந்த கோலார் தங்க வயலில் ஆங்கிலேயர் காலம் முதல் அது மூடப்பட்ட நாள் வரை உழைத்தவர்களில் 99 சதவீதம் பேர் தமிழர்கள் தான். ஆனால் இந்த எந்த உண்மையும் கற்பனைப் படமான கே.ஜி.எப்ல் பேசப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு ரசிகர்களுக்குள் இருக்கும் ஹீரோயிசத்தை தங்களுடைய கதையம்சத்தாலும் , பிரம்மாண்ட காட்சியமைப்பாலும் , ஒரு நவீன சாம்ராஜ்ஜியத்தை ரசிகர்களின் மனதிற்குள் புகுத்தி இன்று இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கின்றனர் கே.ஜி.எப் குழுவினரும், நாயகன் யாஷூம். தன்னுடைய பிம்பத்தால் கே.ஜி.எப் எனும் சினிமா சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பிய யாஷ், அந்த பிம்பத்தை தானே உடைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.அப்போது தான் அவரால் வேறு ஒரு பரிணாமத்தில் இரசிகர்கள் முன் தோன்ற முடியும்.
Post a Comment