Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of "God of Football" Lionel Messi in tamil part-1- கால்பந்து விளையாட்டின் கடவுள் லயோனல் மெஸ்ஸியின் வரலாறு தமிழில் பாகம் -1
கால்பந்து வரலாற்றில் அசாத்திய சாதனைகள் பலவற்றை படைத்து, எண்ணற்ற இரசிகர்களின் உற்ற நாயகனாக உலா வருபவர் லியோ என அழைக்கப்படும் லயோனல் மெஸ்ஸி. கால்பந்து விளையாட்டில் ஒரு வீரர் சிறந்த வீரர் என்பதை அவர் படைத்த சாதனைகளும், அவர் வாங்கிய விருதுகளும் எளிதாக கூறிவிடும். உலகில் கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர் என அறியப்படும் மெஸ்ஸி , அதனை பலஇடங்களில் பலவிதமாக உலகிற்கு உணர்த்தியுள்ளார். அண்மையில் உலகக் கால்பந்து சம்மேளனம், மெஸ்ஸி அவர்களுக்கு கால்பந்து உலகின் உயரிய விருதான "பாலன் டீ ஓர்" விருதை அளித்து கவுரவித்தது.இந்த விருது மெஸ்ஸிக்கு புதிதல்ல, ஏற்கனவே மெஸ்ஸி இந்த விருதை ஐந்து முறை வென்றிருந்தாலும் இந்த முறை அவருக்கு இந்த விருது மிகப்பெரிய கவுரவத்தை பெற்றுத் தந்துள்ளது. இந்த விருது மூலம் ரொனால்டோவை முந்தி தனது ரசிகர்களை குதுகலப்படுத்தியுள்ளார் மெஸ்ஸி. அர்ஜெண்டினா அணிக்காகவும், கிளப் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காகவும் ஆடும் மெஸ்ஸி 600 க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் இளம் பாலகனாக கால்பந்து கிளப்பில் விளையாடத் தொடங்கிய மெஸ்ஸி, தற்போது அர்ஜெண்டினா, பார்சிலோனா கிளப்பின் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்துள்ளார்.
மெஸ்ஸியின் தொடக்கம்:
1987 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்த மெஸ்ஸி, குழந்தை பருவத்திலேயே கால்பந்து விளையாட்டில் தனித்துவம் மிக்க திறன் கொண்டிருந்தார். அவரது தந்தையே கால்பந்து பயிற்சி வழங்கினார். தோற்றத்தில் வளர்ச்சி குறைவாக இருந்ததை, மற்றவர் குறைபாடாக கருதிய சமயத்தில் அதனையே தனது ஆட்டத்திறனுக்கு பக்கபலமாக மாற்றினார் மெஸ்ஸி. தனது இரு சகோதர்கள் மற்றும் நண்பர்களுடன் அர்ஜெண்டினாவின் ரொசாரியோ நகரில் விளையாடி வந்த மெஸ்ஸிக்கு குழந்தை பருவத்திலேயே அவர் சற்றும் எதிர்பாராத வாய்ப்பு கிட்டியது.அது அர்ஜெண்டினாவின் பழமை வாய்ந்த கிளப்பான "Newell's Old Boys"கிளப்பின் ஜூனியர் அணிக்காக விளையாட மெஸ்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டார். தனது ஆறு வயது முதல் அந்த கிளப்பிற்காக ஆடிய மெஸ்ஸி 500 க்கும் அதிகமான கோல்களை அடித்து ஆச்சரியப்படுத்தினார். சிறுவயதிலேயே மெஸ்ஸியின் ஆட்ட நுணுக்கங்கள் சக வீரர்கள், பயிற்சியாளர்களை வெகுவாக கவர்ந்தது. கால்பந்து விளையாட்டில் மிக வேகமாக முன்னேறி கொண்டிருந்த மெஸ்ஸிக்கு , குழந்தை பருவத்திலேயே மிகப்பெரிய சோகம் தொற்றிக்கொண்டது. மெஸ்ஸியின் உடலில் வளர்ச்சி தொடர்பான ஹார்மோன் குறைபாடு இருந்தது. பிறப்பில் 7000 ஆயிரத்தில் ஒருவரை பாதிக்கும் இக்குறைபாடு சிறுவன் மெஸ்ஸியை பாதித்தது. இரண்டு ஆண்டுகள் சிகிச்சைக்கு பிறகும் இக்குறைபாடை குணப்படுத்த முடியவில்லை. சிகிச்சையைத் தொடர இன்னும் பணம் தேவைப்பட்டதால் என்ன செய்வதென்று அறியாமல் மெஸ்ஸியின் தந்தை சோகக் கடலில் மூழ்கினார். உடனடியாக மெஸ்ஸியின் திறமையை அறிந்த பல்வேறு கிளப்புகள் அவர ஏலம் எடுக்க முடிவு செய்தது. இதில் முந்திய பார்சிலோனா கிளப் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ததுடன், அவருக்கு தேவையான சிகிச்சைக்கு தாங்கள் உதவி செய்வதாகவும் கூறியது.
கால்பந்தில் மெஸ்ஸியின் தொடக்கம்:
2001 முதல் 2003 வரை பார்சிலோனா அணியின் இளையோர் அணிக்காக விளையாடிய மெஸ்ஸி , தனது சிகிச்சையையும் தொடர்ந்து வந்தார். 2003 ஆம் ஆண்டு "எப்.சி போர்டோ "கிளப் அணிக்கு எதிராக நடைப்பெற்ற நட்பு ரீதியான போட்டியில் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக களமிறங்கினார்.இருந்தாலும் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக களமிறங்க இன்னும் ஒரு ஆண்டு தேவைப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக பார்சிலோனா அணிக்காக இளம் வீரராக களமிறங்கினார் மெஸ்ஸி. கால்பந்தில் உயரிய லீக் தொடர்களில் ஒன்றான "சாம்பியன்ஸ் லீக் "தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால் மெஸ்ஸிக்கு ஐரோப்பிய குடியுரிமை கட்டாயமாக தேவைப்பட்டது. இதற்காக சட்ட ரீதியான பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 2005 ஆம் ஆண்டில் மெஸ்ஸிக்கு ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. இதன் பின்னர் தான் பார்சிலோனா அணிக்காக 2005 ஆம் ஆண்டு "சாம்பியன்ஸ் லீக்" சீசனில் மெஸ்ஸி அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் ரொனால்டினோ எனும் ஜாம்பவான் இடம்பெற்றிருந்தார். இவர் மூலம் தான் மெஸ்ஸி தனது முதல் கோலை அந்த சீசனில் அடித்தார். இதுவே மெஸ்ஸி வாழ்க்கையில் முதல் மைல்கல்லாக அமைந்தது. மெஸ்ஸியின் பார்சிலோனா பயணத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்தது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த சார்லஸ் பெக் சாவும், ரொனால்டினோவும் தான்.
மெஸ்ஸியை தனது இளைய சகோதரர் எனக் கூறியுள்ளார் ரொனால்டினோ , இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகவும், கால்பந்து உலகில் பல சாதனைகள் இவருக்காக காத்துக்கொண்டிருக்கின்றன எனவும் ரொனால்டினோ புகழுரைத்தார்.
ஹார்மோன் குறைபாடும், அவற்றை கடந்து சாதித்ததும்:
பார்சிலோனா அணிக்காக கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய போது யாரிடமும் பேசாமல் தனிமையை விரும்பினார் மெஸ்ஸி. ஹார்மோன் குறைப்பாட்டால் குள்ளமாக இருந்ததால் சக வீரர்களே கிண்டலடித்தனர் மெஸ்ஸியை. பிறகு தொடர் சிகிச்சையால் குறைபாடு நீங்கி மெஸ்ஸி உயரமடைய தொடங்கிய போது தான் தனது மனநிலையை மாற்றி மற்றவர்களிடம் சகஜமாக பழகத்தொடங்கினார். கிளப் போட்டிகளில் மெஸ்ஸி கால்பதித்து வந்த சமகாலத்திலேயே தனது தாய் நாடான அர்ஜெண்டினாவிற்கு கால்பந்தில் முழு பங்களிப்பை வழங்கி வந்தார். 2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியுரிமையை பெற்ற சமயத்தில், மெஸ்ஸிக்கு மிகப்பெரிய முடிவெடுக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. அது சர்வதேச அளவில் ஸ்பெயின் அணிக்காக கால்பந்து விளையாட வேண்டுமா? அல்லது தாய் நாடான அர்ஜெண்டினா அணிக்காக விளையாட வேண்டுமா? என்ற சூழல் ஏற்பட்டது. இதில் தனது தாய் நாட்டிற்கே விளையாட விரும்புகிறேன் என அறிவித்தார் இளம்வயது மெஸ்ஸி. முதிர்ச்சியடையாத வயதிலே அவர் எடுத்த முடிவு, அவருக்கு பல அர்ஜெண்டினா ரசிகர்களை பெற்றுத்தந்தது. இதன் பின் 2005 ஆம் நடைப்பெற்ற "உலக யூத் சாம்பியன்ஷிப் தொடரில்" அர்ஜெண்டினா அணியின் கேப்டனாக மெஸ்ஸி களமிறங்கினார். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அர்ஜெண்டினாவிற்கு கோப்பையை வென்றுக்கொடுத்தார் மெஸ்ஸி. இதனால் அர்ஜெண்டினாவின் சீனியர் அணிக்கு தேர்வான மெஸ்ஸி, அதே ஆண்டில் ஹங்கேரி அணிக்கு எதிராக நடைபெற்ற நட்பு ரீதியான ஆட்டத்தில் களம் கண்டார். மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்காக சாதிக்க தொடங்கிய போது , கால்பந்து உலகின் முடிசூடா மன்னனான மரடோனா உடன் ஒப்பிட்டு பேசத் தொடங்கினார்கள். மேலும் மரடோனா படைத்த சாதனைகளை மெஸ்ஸி படைப்பார் எனப் புகழ்ந்து கூறப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் மரடோனா அர்ஜெண்டினா அணியை தலைமையேற்று சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி உலகக்கோப்பை உட்பட பல்வேறு முக்கிய கோப்பைகளையும் வென்றுக்கொடுத்தார். இதற்கும் மேலாக மெஸ்ஸி கால்பந்தில் பல நுணுக்கங்களை கொண்டிருப்பதாக மரடோனாவே புகழ்ந்தார்.
நிறைவேறாத கனவு:
மெஸ்ஸி தரவரிசையில் முன்னண வீரராக திகழ்ந்தாலும், இதுநாள்வரை அவரால் நிறைவேற்ற முடியாத கனவு ஒன்று உள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் 4 உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி பங்கேற்றுள்ளார். இதில் அவர் பங்கேற்ற முதல் இரண்டு தொடரில் அர்ஜெண்டினா கால் இறுதியோடு வெளியேறியது. அணி தோற்றாலும் கிளப் புகழால் மெஸ்ஸி மிகவும் திறமை வாய்ந்த வீரராக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது கோடிக்கணக்கான இரசிகர்களை கவர்ந்தார். இவரது திறன் வாய்ந்த ஆட்டம் இருந்தும், நாக்-அவுட் போட்டிகளில் எதிரணிகள் பலம் வாய்ந்ததாக இருந்ததால் அர்ஜெண்டினா அடுத்தடுத்த தொடர்களில் இருந்து வெளியேற்றப்பட்டது. மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் அர்ஜெண்டினா அணிக்காக எந்த அளவுக்கு புகழப்பட்டாலும் அணி முக்கியமான போட்டிகளில் எல்லாம் தோல்விகளை சந்திக்கும் போது இரசிகர்களால் பெருமளவில் விமர்சிக்கப்பட்டார். காரணம் இரசிகர்கள் பெரும்பாலும் அவரது ஆட்டத்தையே சார்ந்திருந்தனர். குறிப்பாக மரடோனா மறைவிற்குப் பிறகு அர்ஜெண்டினா அணி ஒரு அணியாக இணைந்து செயல்படுவது இல்லை என்ற விமர்சனங்கள் இரசிகர்களாலும், கால்பந்து விமர்சகர்களாலும் தொடர்ந்து வைக்கப்பட்டன. ஆனால் இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2014 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. இந்த அணிக்கு தலைமையேற்ற மெஸ்ஸி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் அணியை வழிநடத்தினார். To be continued
இன்றளவும் மெஸ்ஸி ஒரு சிறந்த வீரராக கால்பந்து உலகில் வளம் வந்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மெஸ்ஸி ஒரு நல்ல மனிதர், அவரின் செயல்பாடுகளையும், அவரின் சாதனைகளையும் மெஸ்ஸி அவர்களின் வரலாற்றின் இரண்டாம் பதிவில் காணலாம்.
Post a Comment