-->

History of CR7 in Tamil part-1_ கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வரலாறு தமிழில் பாகம்-1

4 minute read
போர்ச்சுகலில் இருந்து 1000 மைல்களுக்கு அப்பால் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவு "மதீரா"(Madeira). வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த அந்தக் குடும்பத்தில் 4 ஆவதாக பிறக்க இருந்தக் குழந்தையை கருவிலேயேக் கலைக்க திட்டமிட்டிருந்தார் அந்த ஏழைத் தாய், ஆனால் தீவிர கத்தோலிக்கரான அந்த தாய் தனது வயிற்றில் உள்ள குழந்தை, தங்கள் குடும்பத்திற்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் எனக் கூறி தனதுகருக்கலைப்பு முடிவை கைவிடுகிறார்.37 வயதான அந்தப் பொக்கிஷத்தின் இன்றைய மதிப்பு 57 ஆயிரம் கோடி ரூபாய். உலக வரைப் படத்தில் கண்ணுக்கு தெரியாத தீவில் பிறந்து, இன்று ஐரோப்பா கண்டம் முதல் ஆசிய துணைக்கண்டம் வரை அவரது பெயர் நாடி நரம்பு தெரிக்க உச்சரிக்கப்படும். தனது மின்னல் வேக விளையாட்டால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு, கால்பந்தாட்ட சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வரும் அந்த வீரர் வேறு யாரும் இல்லை அவர்தான், கிறிஸ்டியானோ ரொனால்டோ டொஸ் சான்டோசு அவெய்ரோ. (Cristiano Ronaldo dos Santos Aveiro) 

ரொனால்டோவின் தொடக்கம்:

போர்ச்சுகளின் "மதீரா" தீவில் அமைந்துள்ள செயின்ட் ஆண்டணி(Saint Anthony) 1980 களில் மிகவும் வறுமையான பகுதிகளில் ஒன்று. அங்கு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த மரியா டோலோரஸ் டோஸ் சாண்டோஸ் விவிரோஸ் டா அவீரோ(Maria Dolores Dos santos viviros da Aveiro) தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த ஜோஸ் டினிஸ் அவீரோ(jos denis Aveiro) தம்பதிக்கு மூன்று குழந்தைகள், 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மரியா- டினிஸ் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ டொஸ் சான்டோசு அவெய்ரோ. (Cristiano Ronaldo dos Santos Aveiro) . முதலில் தோட்ட வேலையில் இருந்த டினிஸ் , பின்னர் செயின்ட் ஆண்டணியில் உள்ள ஆண்டோரின்ஹா( Andorinha) எனும் கால்பந்து கிளப்பில் பணிக்கு சேர்கிறார். தந்தை டினிஸ் உடன் கால்பந்து போட்டிகளை காண தொடங்கினார் சிறுவன் ரொனால்டோ. மைதானத்தில் வீரர்கள் விளையாடுவதைப் பார்த்த ரொனால்டோ அதேப் போல் விளையாடவும் தொடங்கினார், இதைப் பார்த்த டினிஸ் மகனுக்கு கால்பந்து கனவை விதைக்கத் தொடங்கினார். தனது 7 ஆவது வயதில், தந்தை பணியாற்றிய உள்ளூர் கால்பந்து கிளப் சிறுவர் அணியில் ரொனால்டோவிற்கு விளையாட வாய்ப்புக் கிடைத்தது. வெற்றி பெறும் போது கிடைக்கும் ஊக்கத்தை விட, தான் கோல் அடிக்கும் போது தனது தந்தையின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி தான் ரொனால்டோவிற்கு ஊக்கமாக அமைந்தது. இப்படிதான் ரொனால்டோவின் கால்பந்து பயணம் தொடங்குகிறது. 

குடும்ப வறுமையும், ரொனால்டோவின் வளர்ச்சியும்:

ரொனால்டோ பெரிய சாதனை வீரராக வலம் வர வேண்டும் என்பதே அவரது தந்தையின் கனவு. ஆனால் வறுமையின் காரணமாக அவரால் ரொனால்டோவிற்கு ஷூக்களை கூட வாங்கி தர முடியவில்லை. ரொனால்டோ தனது ஆட்டங்களுக்கு தனது சகோதரரின் பழைய ஷூக்களை தான் அணிந்து விளையாடினார். இருந்தாலும் மைதானத்தில் அவரது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அது தடையாக அமையவில்லை. இவரது திறமைகளை ஆட்டத்தின் போது தனித்துவமாக இருந்ததால், அனைவரின் பார்வையும் இவர் மீது விழத்தொடங்கியது. போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் உள்ள ஸ்போர்டிங் எனும் ஒரு கால்பந்து கிளப்பில் இருந்து ரொனால்டோவிற்கு அழைப்பு வந்தது. அப்போது அவருக்கு வயது 11.குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், எந்நேரமும் சோகத்துடன் காணப்பட்ட ரொனால்டோவை வீட்டிற்கு அனுப்பியது ஸ்போர்டிங் கிளப். ஆனால் ரொனால்டோவின் தந்தை டினிஸின் நண்பரும், அந்த ஊரின் கால்பந்து வீரரும் ஆன பாரூஸ் என்பவர் இதில் தலையிட்டு ரொனால்டோவிற்கு அறிவுரை வழங்கினார். குடும்பத்தை ஏழ்மையில் இருந்து மீட்க கால்பந்து தான் ஒரே வழி எனப் பொறுப்பை எடுத்துரைத்தார். இதனைக் கேட்டு புதிய ரொனால்டோவாக லிஸ்பன் திரும்பி, தனது குடும்பத்துக்காக விளையாடத் தொடங்கினார். 15 வயதில் ரொனால்டோவிற்கு சீரான இதயத் துடிப்பு இருக்கவில்லை, மாறாக அவர் மேற்கொண்டு விளையாடும் பட்சத்தில் மரணிக்க கூடும் என எச்சரித்தார்கள். இது அவரின் கால்பந்து கனவுக்கே மூடுகதவாக அமைந்தது. இருந்தாலும் தடைகளை உடைத்தெறிந்து பீனிக்ஸ் பறவைப் போல் மீண்டெழுந்தார். 

History of CR7 in Tamil-

ஸ்போர்டிங் அணியில் அவர் செய்யும் சாகசங்கள், போர்ச்சுகல் நாட்டை விட்டு பல வெளி நாடுகளிலும் பேசத் தொடங்கியது. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி எனப் பெரிய கிளப்களில் இருந்து ரொனால்டோவை கவனிக்கத் தொடங்கினர். அந்த நிலையில் தான் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக ரொனால்டோவின் ஸ்போர்டிங் அணி விளையாடியது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ சிறப்பாக விளையாடி,  அதைப் பார்த்த எதிரணி பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன், ரொனால்டோவை தங்கள் அணிக்கு வாங்காமல் புறப்படப்போவதில்லை எனக் கருத்து தெரிவித்தார். இறுதியாக 2003 ஆம் ஆண்டு 103 கோடி ரூபாய்க்கு ஸ்போர்டிங் அணியில் இருந்து ரொனால்டோவை வாங்கியது மான்செஸ்டர் யுனைடெட் அணி. அடுத்ததாக ரொனால்டோவின் கால்பந்து வளர்ச்சிக்கு உதவியது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன். ரொனால்டோ முதல் முறையாக ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் மாற்றுவீரராக களமிறக்கப்பட்டார் ரொனால்டோ. அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடையில்,தான் கற்றுக்கொண்ட வித்தைகளை இறக்கி கைத்தட்டல் வாங்க வெகுநேரம் எடுக்கவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும்,  அவருக்கு வழங்கப்பட்ட டீ- சர்டீல் உள்ள 7 ஆம் நம்பருக்கும் தான் பொருத்தமானவன் என்பதை முதல் ஆட்டத்திலேயே நிருபித்து, Standing Ovation பெற்றார் ரொனால்டோ. 

ரொனால்டோவின் கடினக் காலங்கள்:

மெல்ல மெல்ல வளரத்தொடங்கியப் போது தான் அவருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்பட்டது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவரது தந்தை நுரையீரல் பாதிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு  செப்டம்பர் 6 ல் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இந்த நேரத்தில் தான் ரொனால்டோ ரஷ்யா அணிக்கு எதிராக உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் போர்ச்சுகல் அணிக்காக ஆட இருந்தார். தந்தை இறந்த செய்தி அறிந்ததும், போட்டியை கைவிட்டு விட்டு ரொனால்டோ ஊருக்கு புறப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். தன் தந்தைக்கு தான் கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்பது தான் கனவு எனவே அவரது கனவை நிறைவேற்ற வேண்டும் என எண்ணி, தந்தை இறந்த துக்கத்திலும் கனவுகளை சுமந்து களத்தில் இறங்கினார் ரொனால்டோ. ரஷ்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவின் உணர்வுப்பூர்வமான ஆட்டம்!ரஷ்யா வீரர்களை மட்டுமல்லாது பார்ப்போர் நெஞ்சை உறய வைத்தது. 

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், அந்த நாட்டு அணியின் நட்சத்திர வீரர் ரூணி ரொனால்டோவை காயப்படுத்தி விட்டார் என்பதற்காக ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. ஆனால் ரொனால்டோ வேண்டுமென்றே காயம் ஏற்பட்டது போல் நடிக்கிறார் என இங்கிலாந்து ரசிகர்கள் சாடினர். அந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி இங்கிலாந்தை வீழ்த்தி, உலகக்கோப்பையிலிருந்தே வெளியேற்றியது. இதனால் இங்கிலாந்தின் நம்பர் 1 எதிரியானார் ரொனால்டோ. உலகக்கோப்பை முடிந்து மான்செஸ்டர் அணிக்காக விளையாட ரொனால்டோ இங்கிலாந்து கிளம்பிய போது, அந்நாடு முழுவதும் அவருக்கு எதிர்ப்பலை வீசியது. ஒரு பக்கம் தந்தையின் இழப்பால் வாடிய ரொனால்டோ, மறுபக்கம் சொந்த அணியின் ரசிகர்களால் தூற்றப்பட்டார். 
இவை அனைத்திற்கும் கால்பந்தைக் கொண்டே பதிலளிக்க முடிவு செய்தார் ரொனால்டோ. 

ரொனால்டோவின் சாதனைகள்:

இதன் காரணமாக வழக்கத்தை விட அவரது ஆட்டங்களில் அனல் பறந்தது. 2007-2008 சீசன்களில் 31 கோல்கள் அடித்ததன் மூலம் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெயர் பெற்றார். அதே ஆண்டில் தங்கக் காலணி விருதையும் வென்று அசத்தினார். 7 ஆம் நம்பர் ஜெர்சி வழங்கப்பட்ட போது விமர்சிக்கப்பட்ட ரொனால்டோ, அது எண்ணை வைத்து CR7 என செல்லமாக அழைக்கப்பட்டார். 

2007,2008,2009 என ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் தொடர்ந்து மூன்று முறை ரொனால்டோவின் அசுர பலத்தால் கோப்பையை வென்று ஹாட்ரிக் அடித்தது மான்செஸ்டர் யுனைடெட் அணி. 2008ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும், பீபா கோப்பையையும் வென்றது. அதே ஆண்டில் கால்பந்து உலகின் உயரிய விருதான "பாலன் டீ ஓர்"(Ballon D'OR) விருதை உச்சி முகர்ந்தார் ரொனால்டோ. பீபா சிறந்த வீரருக்கான விருது, கோல்டன் ஷீ என அடுக்கடுக்காக விருதுகளும் ரொனால்டோ வசம் வந்தன.