-->

-History of Kacchatheevu in tamil-கச்சத்தீவின் வரலாறு தமிழில்

4 minute read

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவின் மத்திய , மாநில அரசுகள் உணவுப்பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட  பல உதவிகளை இலங்கைக்கு செய்து வருகின்றன. இதற்கிடையே இந்த சூழலை சாதகமாக்கிக் கொண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தியாவின் தீவு ஒன்றை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்திருக்கின்றன.அது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நெடுங்கால பிரச்சினையாக இருக்கும் கச்சத்தீவு என்பது தான் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதுபோன்ற சூழலில் தான் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துக் கொண்டார். அப்போது தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், கச்சத்தீவு விவகாரம் குறித்தும் பேசினார். தமிழ்நாடு கடலோர சமுதாய மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் , கச்சத்தீவினை மீட்டெடுத்து  தமிழ்நாடு மீனவ மக்களின் பாரம்பரிய மீன் பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட இதுவே சரியான தருணம் என்றார். இதுக்குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியும், நேரில் சென்றும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை விளக்கினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். 

கச்சத்தீவு இஇருநாடுகளுக்கும் தொடர்பான பிரச்சினை என்பதால் , இருநாட்டு பிரதமர் தலைமையிலான அமைச்சரவையே முடிவு செய்ய வேண்டும் என்பதை அறிந்தே முதலமைச்சர் தொடர்ச்சியாக பிரதமரை வலியுறுத்தி வருகிறார். ஆனால் முதலமைச்சரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பல்வேறு கொள்கைகளுடன் செயல்பட்டு வந்தாலும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளும் ஒரே குறிக்கோளுடன் செயல்படுகின்றன. இலங்கை பிரதமர் கச்சத்தீவு விவகாரத்தில், அதிக கவனம் செலுத்தி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை வலியுறுத்த வேண்டும் என்றார், மேலும் இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில்க் கொண்டு ஒவ்வொரு தீவுகளை விற்கும் நடவடிக்கையில் இறங்கினால் , அதைவிட நாங்கள் மடிந்துப் போவதே மேல் என்றும் கூறினார். இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசு தனியாக நிதி ஒதுக்கிய போது வரவேற்ற இலங்கை அரசு, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்தை முற்றிலும் எதிர்க்கறது. 



கச்சத்தீவின் வரலாறு:

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆன்மீக தளங்களுள் முக்கியமானது இராமேசுவரத்தில் உள்ள இராமநாதசுவாமி திருத்தலம். இந்த இராமேசுவரத்தில் இருந்து வடகிழக்கில் சரியாக 25 கி.மீ தொலைவில் பரந்து விரிந்த வங்காள விரிகுடாவின் நடுவே அமைந்துள்ளது கச்சத்தீவு. 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவின் அதிகபட்ச நீளமே 1.5 கிலோ மீட்டர் தான். வெண் மணல் திட்டுக்கள், ஆங்காங்கே பள்ளங்கள், நடுவே கடல் மட்டத்திலிருந்து 20 அடி உயரத்திற்கு கல்லுமலை, செடி கொடி,மரங்கள் கொண்ட காடுகள் என இயற்கைக்கு உரிய அழகுடன் மிளிர்கிறது கச்சத்தீவு. இப்பகுதியில் பச்சை நிற ஆமைகள் அதிகளவில் காணப்படுவதால் பச்சைத் தீவு என்றும் அழைக்கப்பட்டு, அதுவே மறுவி கச்சத்தீவு என ஆயிற்று எனக் கூறுவோரும் உண்டு. கச்சம் என்பதற்கு ஆமை என்று பொருள். நோய்க்கொல்லியான உமிரிப் போன்ற பல்வேறு மூலிகைகளைக் கொண்ட தீவு கச்சத்தீவு. இந்த தீவில் புனித அந்தோனியார் தேவாலயமும் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒரு வாரத்திற்கு வழிபாடு நடைபெறுவது வழக்கம். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட்ட பின்பு இந்த வழிபாடு தடைபட்டது. 

20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இராமநாதபுரத்தை சேர்ந்த சீனிக்குப்பன் என்பவர் இந்த ஆலயத்தைக் கட்டியதாகவும், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் இந்த ஆலயத்திற்கு பூசை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் கச்சத்தீவு உள்பட தென்பகுதியில் உள்ள அனைத்து தீவுகளும் வங்கக்கடலில் மரக்கலங்களைக் கட்டி ஆண்ட சோழர்களுக்கே சொந்தமாக இருந்துள்ளது. அதில் கச்சத்தீவு கடற்படையினர் ஓய்வெடுக்கவும், உணவருந்தவும், கப்பல்களை சரிசெய்யும் இடமாக இருந்து வந்துள்ளது. 1480 ல் சோழ மன்னர்கள் ஈழத்தை நோக்கி செல்லும் போது கச்சத்தீவிலே ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கச்சத்தீவில் சோழர்கள் மட்டும் கிடையாது , அனைத்து மக்களின் பங்கும் இருந்ததாக ஆய்வுக் கூறுகிறது. பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டின் விளைப்பொருட்களை கச்சத்தீவிலிருந்தே ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலிய சங்க நூல்கள் இது தொடர்பான குறிப்புகளை தாங்கியுள்ளன.

தமிழ் மன்னர்கள் கீழ் கச்சத்தீவு:

12 ஆம் நூற்றாண்டில் இராமேசுவர கடற்பாதையில் பல குறுநில மன்னர்கள் சோழர்களால் அமர்த்தப்பட்டனர். 16 ஆம் நூற்றாண்டில் சோழர்கள், பாண்டியர்கள் ஆட்சி மறைந்ததும், சோழர்களால் அமர்த்தப்பட்ட தளபதிகள் கட்சதீவின் மீது ஆட்சி, அதிகாரம் செலுத்த தொடங்கினார்கள். இவர்களே பின்னாளில் சேதுபதி மன்னர்கள் என அழைக்கப்பட்டனர். 1605 ல் முதன்முதலில் மன்னராக சேதுபதி மன்னர் புகழுர் தலைநகரில் பதவியேற்றுள்ளார். கச்சத்தீவு இவர்களது கட்டுப்பாட்டில் தான் இருந்த வந்துள்ளது, சேதுபதி மன்னர்கள் தமிழ் ஈழ மக்கள்களை கச்சத்தீவிலே சந்தித்து வந்துள்ளார்கள். மரைக்காயர்கள் உட்பட பலருக்கும் கச்சத்தீவை குத்தகைக்கு விடுவதற்கும், தொகையை வசூலிப்பதற்கும் சேதுபதி மன்னர்களே உரிமம் பெற்றுள்ளவர்களாக இருந்துள்ளனர். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னர், தமிழர்களுக்கு எதிரான மன்னர்களின் உதவி கொண்டு சேது மன்னர்களின் ஆட்சியை  ஆங்கிலேயர்கள் வீழ்த்தினர். அதுவரை மன்னர்களாக இருந்தவர்கள் எல்லாம் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறுநில மன்னர்களாகவும், ஜமீன்தார்களாகவும் மாறத்தொடங்கினர். ஆரம்பத்தில் கச்சத்தீவு குறுநில மன்னர்களிடத்தில் இருந்த, ஆங்கிலேயர்களால் குத்தகைக்கு தான் எடுக்கப்பட்டது. ஆனால் 1856 ல் சேது நாட்டின் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1885 ல் விக்டோரியா மகாராணியின் ஆட்சியில் கச்சத்தீவின் உரிமை, இராமநாதபுர மன்னர்களுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 1935 ல் முதல் உலகப்போர் தொடங்கிய போது , ஆங்கிலேயர்கள் கச்சத்தீவில் தான் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். 

1911 ல் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் சேது நில மன்னர்களுக்கு உரிய குறுநிலப் பட்டியலில் கச்சத்தீவு இடம் பெற்றிருந்தது. 1944 ல் தூத்துக்குடி முத்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தயாரித்த நிலப்படத்திலும் , 1950 ல் தமிழ்நாடு அரசு தயாரித்த நிலப்படத்திலும், கச்சத்தீவு இராமநாதபுர சேது மன்னர் ஆட்சியில் சேர்க்கப்பட்டிருந்தது. 1929 - 1944 க்கு இடைப்பட்ட ஆண்டுகளிலும் மீன்பிடித்துறைகளின் பற்றிய தமிழ்நாடு அரசின் கோப்புகளிலும் கச்சத்தீவு இராமநாதபுரம் குறுநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.1969ல் இங்கிலாந்தில் காமன்வெல்த் மாநாடு நடந்த போது, இலங்கை பிரதமர் டட்லிஸ் சேனநாயகமும், இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் நிலைமை மோசமாகும் வகையில் முடிவுகளை எடுப்பதில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். இராமநாதபுரம் ஜமீனின் ஆவணங்களைக் காட்டி கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என தி.மு.க அரசு நிருபித்த போதும், இந்திராகாந்தி இதனை ஏற்கவில்லை. அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் கச்சத்தீவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பினார். இதனையும் அவமதித்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம் என்பது போல் இருநாடுகளுக்கும் இடையே எல்லைகள் வரையறுக்கப்பட்டன. 

இந்தியா- இலங்கை ஒப்பந்தங்கள்:

பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஐ. நா தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்த போது, இலங்கையின் தலையீட்டால் அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதனால் இந்தியா இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கியிருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது. இந்நிலையில் 1976 ல் இந்தியாவிற்கும்,  இலங்கைக்கும் இடையில் இரண்டாவது கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்பகுதிகளிலும், இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திலும் இலங்கையின் அனுமதி இன்றி மீன்பிடிக்க  மட்டார்கள் என்றது ஒப்பந்தம். இது தமிழ்நாட்டு அரசையும், மீனவர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. மத்திய அரசின் முடிவால் சொந்த நிலத்திற்கே உரிமை கோர முடியாமல் விரட்டியடிக்கப்படும், நிலைக்கு தள்ளப்பட்டனர் தமிழக மீனவர்கள். 

காலம் காலமாக மீன்பிடித்த பகுதியில் மீனபிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. எல்லை தாண்டினால் எச்சரிக்கை செய்து அனுப்பிய இலங்கை கடற்படை, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வதைக் கடந்து , துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வதையும் அறங்கேற்றியது. தமிழர் கட்டி ஆண்ட கச்சத்தீவும், கடற்பகுதியும் இன்று பூத உடல்களால் நிரம்பி வழிகின்றன. இந்தியா, இலங்கையையும் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாகவே குறிப்பிட்டு வந்துள்ளது. இந்தியா முழுவதும் மீனவர்கள் இருந்தலும் ஏனோ தமிழ் மீனவர்கள் மட்டுமே தமிழர்கள் எனும் அடைப்புக்குறிக்குள் அடைக்கப்படுகின்றனர்.