-->

History of Asuran Dhanush in Tamil.அசுரன் தனுஷின் வரலாறு தமிழில்

6 minute read

 யாருடா இந்த பையன்?, இவன் எல்லாம் ஹீரோவாக நடிக்கிறான் எனப் பெரிதும் விமர்சிக்கப்பட்ட நடிகர்! தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு என எழுதி வைக்கப்பட்டிருந்த தகுதிகளை உடைத்தெறிந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்தது மட்டுமல்லாமல் , தேசிய விருது, ஃபிலிம் பேர் விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்த கதாநாயகன், நடிப்பு மட்டுமின்றி, பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என பன்முக தன்மைக் கொண்டு தன் மீதான விமர்சனங்களை புறம்தள்ளி புகழின் உச்சிக்கு சென்றவர் தான் தனுஷ். திரைத்துறையில் அறிமுகமானதிலிருந்து பல சறுக்கல்கள், விமர்சனங்கள், சர்ச்சைகளில் சிக்கினாலும் இன்றுவரை தவிர்க்க முடியாத முன்னனி நடிகராக தனுஷ் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

History of dhanush in tamil

தனுஷின் தொடக்கம்:

தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆன கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு, சினிமாவில் நடிகராக பயணத்தை தொடங்கிய போது பத்திரிக்கைகள் முதற்கொண்டு தனுஷை கடுமையாக விமர்சித்தன.12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த தனுஷிற்கு சினிமாவில் ஈடுபாடு இருந்தது. அப்போது தனுஷின் சகோதரரான செல்வராகவனும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருவரது விருப்பத்தையும் தந்தை கஸ்தூரி ராஜா நிறைவேற்றி வைத்தார். "துள்ளுவதோ இளமை" என்ற படத்தை எடுக்க முடிவு செய்து, அதில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனாக தனுஷை நடிக்க வைத்தார். இப்படத்தை செல்வராகவன் இயக்கினாலும் இருவரும் யாரென்று  தெரியாது என்பதால் படத்திற்கு ஒரு பிராண்ட் தேவைப்பட்டதால் , படத்தின் இயக்குனராக தனது பெயரை கஸ்தூரி ராஜா போட்டுக்கொண்டார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் தனுஷை ஒரு ஹீரோவாக யாரும் ஏற்கவில்லை. இதனை வேரறுக்கும் விதமாக  செல்வராகவன் அடுத்த ஆண்டே தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார். அந்தபடம் தான் தனுஷ் வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்த "காதல்கொண்டேன்". இதில் தனுஷ் நடித்த ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ஆதரவற்ற , யாருடனும் சகஜமாக பழகமுடியாத கதாபாத்திரத்தில் தனுஷ் கொண்டு வந்த யதார்த்த நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் உள்ள இளைஞர்கள் மத்தியில் தனுஷ் என்ற நடிகர் பிரபலமடைந்தார். இதற்கு அடுத்தப் படமான "திருடா திருடி"படமும் தனுஷுக்கு ஹிட் படமாக அமைந்ததுடன் அப்படத்தில் இடம்பெற்ற "மன்மதராசா" பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்தது. இந்தக் காலகட்டத்தில் தான் நடிகர் சிலம்பரசனும் தமிழ் சினிமாவில் தனக்குறிய ஸ்டைலில் படங்களை கொடுக்க ஆரம்பித்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். தனுஷும் சிலம்பரசனும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் படங்களை வெளியிட ஆரம்பித்தனர். தனுஷ் அறிமுகமான "துள்ளவதோ இளமை " படமும் , சிலம்பரசன் முதல்முதலாக முழு நேர ஹீரோவாக நடித்த "காதல் அழிவதில்லை" படமும் 2002 ஆம் ஆண்டில் நான் வெளியாகின. ஆரம்பத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த தனுஷும், சிலம்பரசனும்,2004 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடையத் தொடங்கி , தங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்கள். 2004 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" படமும் , சிம்பு நடித்த "கோவில்"படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. அந்த சமயத்தில் தமிழ் திரைப்படங்கள் குறைவான எண்ணிக்கையில் வெளிவந்ததால் இருவரது படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இருப் படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவில்லை என்றாலும் வெற்றி பெற்று தனுஷையும், சிம்புவையும் பிரபலமாக்கியது. 


வெற்றியும், எதிர்ப்பும்:

இந்த சமயத்தில் தான் தனுஷ் நடிப்பில் "சுள்ளான்" என்றப் படம் வெளியானது. இதில் தனுஷின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புகள் , ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் என அனைவரிடமும்  பல எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் , இடைவெளி விடாமல் அடுத்தடுத்தப் படங்களில் தனுஷ் நடித்து வந்தார். இந்த சமயத்தில் தான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அவர்களுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் - தனுஷிற்கும் திருமணம் என திடிரென அறிவிக்கப்பட்டது. தன்னை விட இரண்டு வயது அதிகமான ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்துகொண்ட போது தனுஷிற்கு 23 வயது. இதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மருமகன் என்ற அந்தஸ்து கிடைத்ததால் , தனுஷ் தானாகவே பிரபலமடைந்தார். இருப்பினும் பின்வரும் காலங்களில் தனுஷ் , தன்னை ரஜினிகாந்தின் மருமகன் என அடையாளப்படுத்திக் கொள்ளாமால் தனக்கான பாணியில் சினிமாவில் தொடர்ந்து பயணித்ததால் அடுத்தடுத்து பல வெற்றிகளை தனுஷ் குவித்தார். தனுஷிற்கு "தேவதையைக்கண்டேன்" திரைப்படம் ஒரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களில் ஒருவரான பாலு மகேந்திரா தனுஷின் நடிப்பைப் பார்த்து தான் இயக்கிய "அது ஒரு கனா காலம் " படத்தில் அவரை நடிக்க வைத்தார்.இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்றாலும் தனுஷின் நடிப்பை மேலும் ஒரு படி உயர்த்தி காண்பித்தது. இதனைத் தொடர்ந்து தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் "புதுப்பேட்டை" என்றப் படத்தில் நடித்தார். இந்தப் படத்தை செல்வராகவனின் சிறந்தப் படைப்புகளில் ஒன்றாக கருதப்பட்ட அதே சமயம், தனுஷின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இப்படத்தில் செல்வராகவன் அவர்கள், ஒல்லியாக இருந்த தனுஷை  ரவுடியாகவும், தாதாவாகவும், அரசியல்வாதியாகவும் காட்டி ஆச்சரியப்படுத்தினார். ஒரு ரவுடியின் செயல்பாட்டை செல்வராகவன் யதார்த்தமாக கூற , தனுஷும் அதை அப்படியே திரையில் பிரதிபலித்தார். இப்படம் வெளியாகும் போது போதிய விளம்பரமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் வசூலைக் குவிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் செல்வராகவனின் இயக்கமும், யுவன்சங்கர்ராஜாவின் இசையும் , தனுஷின் திரை ஆதிக்கமும் இப்படத்தை தமிழ் சினிமாவின் சிறந்தப் படங்களில் ஒன்றாக மாற்றியது. புதுப்பேட்டை படத்தைத் தொடர்ந்து கமர்ஷியல் படமாக வெளியான "திருவிளையாடல் ஆரம்பம்" படத்தில் தனுஷ் துடிப்புமிகு கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கமர்ஷியலாக தனுஷிற்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து தான் தனுஷின் சினிமா வாழ்க்கையில் ஏறுமுகம் தொடங்கியது. 


தனுஷ் - வெற்றிமாறன்:

குறிப்பாக "பொல்லாதவன்" என்ற படத்தின் மூலம், வெற்றிமாறன்- தனுஷ் எனும் மேஜிக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது. வெற்றிமாறனின் இயக்கமும், தனுஷின் இயல்பான நடிப்பும் ஒன்று சேரும் போது தமிழ் திரையுலகம் இந்தக் கூட்டணியை புகழ்ந்து பேசியது. மேலும், சந்தானம், கருணாஸ் உடன் தனுஷ் சேர்ந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து  வெளியான "யாரடி நீ மோகினி"திரைப்படமும் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. அன்றையக் காலக்கட்டத்தில் தனுஷ் நடிப்பில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் "யாரடி நீ மோகினி" எனக் கூறப்பட்டது. மேலும் இந்தப் படத்தின் மூலம் தான் தனுஷிற்கு அதிகப்படியான பெண் ரசிகர்கள் கிடைத்தனர். மேலும் தனுஷ் மீது ஒரு எதிர்மறை விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. தனுஷ் "படிக்காதவன்", "பொல்லாதவன்" என ரஜினிகாந்த் பட தலைப்புகளை தன் படத்திற்கு வைத்து அவரது பாணியை பின்பற்றுகிறார் என்றும் , ரஜினிகாந்த் போன்றே படங்களை தேர்வு செய்து நடிப்பதாகவும், தனக்கேற்ற கதையில் நடிப்பதில்லை எனவும் தனுஷ் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டார். சினிமாவில் பல சோதனைகளை கடந்த தனுஷ், நிஜ வாழ்க்கையிலும் யாரும் எதிர்பார்க்காத துயரத்தை அடைந்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி தனுஷை தங்கள் மகன் எனக் கூறி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த செய்தி தனுஷை மட்டுமல்லாது, தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தங்களுடைய முதல் மகனான கலைச்செல்வன் சிறுவயதிலேயே காணாமல் போனதாகவும், அவர் தான் தற்போது தனுஷாக திரையில் நடித்து வருவதாக கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் உரிமைக்கோரியது. இதற்கு தனுஷ் தரப்பில் மறுப்பு தெரிவித்து, ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் போலி என கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், இதுவரை தனுஷ் தங்கள் மகன் தான் என்றும், அவரிடம் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தனுஷ் வாழ்க்கையில் மறக்க முடியாத கருப்பு அத்தியாயமாக அமைந்தது. இப்படி பல தடைகள் வந்தாலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அடுத்தடுத்து படங்களைக் கொடுத்து வந்தார். தமிழ் திரையுலகில் தொடர்ந்து உச்ச நட்சத்திரமாக நிலைப்பதற்கு , அவரின் வெற்றி இயக்குநர்களான செல்வராகவனும், வெற்றிமாறனும் முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டாவதாக உருவான "ஆடுகளம் " படம் தனுஷ் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் தான் மிகக்குறைந்த வயதில் தேசிய விருது வென்ற தென்னிந்திய நடிகர் என்ற சாதனையை தனுஷ் படைத்தார். சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் தனுஷின் நடிப்பு வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. 


பன்முகத்தன்மை:

நடிப்பில் தேசிய விருது வாங்கிய தனுஷ், பாடல் எழுதுவதிலும், பின்னணி குரல் அமைப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" படத்தில் "நாட்டுசரக்கு" எனும் படலை முதன் முதலில் பாடிய தனுஷ் , அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் எழுதி, அனிருத் இசையமைத்த பாடல் தான் "Why this kolaveri "பாடல், தமிழ், ஆங்கிலம் என இரண்டும் கலந்து எழுதப்பட்ட இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை உலகம் முழுவதும் பெற்றது. அடுத்ததாக தனுஷ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதற்கு ஜெர்மன் மொழியில் "Wunderbar" எனப் பெயர் வைத்தார். வித்தியாசமான பெயராலும், தனுஷின் புகழாலும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் எளிதில் பிரபலமடைந்தது. 3 படத்தைத் தொடர்ந்து Wunderbar தயாரிப்பு நிறுவனம் பல படங்களை தயாரித்தது. குறிப்பாக சிவகார்த்திகேயனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய "எதிர்நீச்சல்", விஜய் சேதுபதியின் "நானும்ரௌடிதான்"ஆகியப் படங்களை தயாரித்தார்.தனுஷ் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒருக் கட்டத்தில் பட வாய்ப்புக்காக அழைந்துக்கொண்டிருந்த இயக்குநர் மணிகண்டனை , வெற்றிமாறன் பரிந்துரையின் பெயரில் தனுஷ் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். மணிகண்டன் இயக்கி, தனுஷ் தயாரித்து பெரும் வெற்றியடைந்த படம் தான் "காக்கா முட்டை" இரண்டு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், திரை விமர்சகர்கள் என அனைவரிடத்திலும்  பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்றது. நடிப்பில் தேசிய விருது வென்ற தனுஷ், தயாரிப்பிலும் தேசிய விருது வென்று சாதித்துக் காட்டினார். இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை" படத்தை தனுஷ் தயாரித்தார். இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்ததுடன், சிறந்த படம் என்ற தேசிய விருதையும் வென்றது. 


பாலிவுட்டில் தனுஷ்:

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து தனுஷிற்கு பாலிவுட் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. "ராண்ச்சனா " எனும் ஹிந்தி படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்தார். இப்படம் தமிழில் "அம்பிகாபதி" எனும் பெயரில் வெளியானது. தனுஷின் நடிப்பு திறமையால் பாலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. 2015 ஆம் ஆண்டு வெளியான "shamitabh" படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்தார். நல்ல திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த தனுஷ், கமர்சியல் படங்கள் மீதும் ஆர்வம் காட்டினார், அப்படி இவர் நடித்த படம் தான் "வேலையில்லா பட்டதாரி".இந்தப் படம் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் தனுஷின் திரையுலகப் பயணத்தில் வசூல் ரீதியாக புதிய மைல் கல்லை எட்டியப் படம் இதுதான். இதனைத் தொடர்ந்து எழுந்தது பல சர்ச்சைகளுக்கும், அமைதிக் காத்த தனுஷ் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்தார், "பவர்பாண்டி" எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த ராஜ்கிரணின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தார். பவர்பாண்டி படத்தின் மூலம் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மையை கொண்டவராக தனுஷ் உருவெடுத்தார். வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2 போன்ற படங்கள் மூலம் லேசான சறுக்கல்களை சந்தித்த தனுஷ், மீண்டும் தனது ஆதர்ச இயக்குநரான வெற்றிமாறனுடன் இணைந்தார். இவர் நடித்த வடசென்னை திரைப்படம் எந்த அளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றதோ அதே அளவிற்கு, வடசென்னை மீனவ அமைப்புகளிலிருந்து எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது. இப்படத்தில் இவர் நடித்த அன்பு எனும் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் வெற்றி தோல்விகள் அமைந்தாலும், தொடர்ந்து சினிமாவில் இடைவிடாது தனது ஆளுமையை தனுஷ் நிரூபித்துக்கொண்டே வருகிறார்.